எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
இலக்கிய சொறிச்சலும் எழுத்தாளரும்
Montag, März 12, 2007
லக்கியங்களின் உயிர்நாடியாக இருப்பனவற்றில் முக்கியமான சில தனித்துவம் தவறாத நேர்மையும், சொல் செயல் வேறுபடா ஒழுக்கமும் எண்ணத்தை எழுத்தில் அழுத்தும் மனவுறுதியும் சுயசிந்தனையின் வெளிப்பாடும் எனலாம்.

இன்றைய புலம்பெயர் இலக்கியப் புகுவாழ்வில் பல்வேறு புதுமனைப் புகுவிழாக்கள் நிகழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் சில கவனிக்கத்தக்க குறைபாடுகள் வெளிப்படத் துவங்கியுள்ளன.

கடல் கடந்து வந்த தமிழ்மக்கள் மத்தியில் நிலவிவந்த மொழித்தொடர்புத் தாகத்தின் தாக்கத்தின் காரணமாக ஆரம்பத்தில் அயல் தேசங்களில் ஆங்காங்கே சிறு சிறு சங்கங்களும் இயக்கங்களும் உருவெடுத்தன.
அப்போதைய காலக் கட்டாயமது. போகப்போக அந்த உண்மையான தாகத்தின் படிப்படியான தேடுதல்கள்தாம் பத்திரிகைகளாகவும் சஞ்சிகைகளாகவும் வளர்வுருவெடுத்து வரத்துவங்கின எனலாம்.

அதன்பின்னர் கணனியுலக வளர்ச்சியின் தாக்கமும் அதிகமாகி தற்போது இணையவலயத்துக்குள் தாகசாந்தி தேடிடும் அளவிற்கு நிலைமை முன்னேறி வந்து கொண்டிருக்கிறது.

வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் இது திருப்திப்படத்தக்க நல்ல வரவேற்கத்தக்க முன்னேற்றமேயாகும்.

ஆனால் இந்த மக்கள் விழைவு என்ற தேவையை யார் யாரோ தத்தமது சுயதேவைகளுக்கும் சுயவெற்றிகளுக்கும் என்று மட்டும் விதி விதித்துக் கொண்டு இலக்கியவட்டத்தின் தகைமைக்குரிய சூழ்நிலையைத் தத்தமது சூழ்நிலைக்கேற்ப வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுமாப்போல மிக மிகப் பக்குவமாகவும் தந்திரமாகவும் திசை திருப்பிக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதே அதன் வளர்ச்சியைப் பற்றிய ஒரு கணிப்பீடு சுதந்திரமாக இடம்பெறின் காணக் கிடைக்கும்போல் தெரிய நேர்ந்திருப்பது மிகக் கவலை தரும் ஒரு விடயமாகும்.

கடும் வெய்யிலில், வெட்ட வெளியில், மணிக் கணக்காக நடந்து நடந்து களைத்தவனுக்குச் சேற்றுநீர் அமிர்தம்போலத் தெரிந்தால் அதில் வியப்பதற்கெதுவுமில்லை. அந்தச் சூழ்நிலையில் அவசியத்தின் முக்கியத்துவம் அப்படித்தான் பிரதிபலிக்கும்.

இதைத்தான் ஆரம்பகால அயல்நாடுவதி தமிழ்மக்களும் பெரும்பாலும் அனுபவித்திருந்தார்கள். இந்த இடத்தில்தான் பருவத்தே பயிர்செய்யத் தெரிந்த நரிகள் சில, எழுத்துலகை எடுத்துக் கொண்டு ஏகத்தான அதிகாரத்தை விழைந்து வந்தன.

ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூக்களான இவர்களை, சீனி இல்லாத இடத்திலே இதுவாவது கிடைக்கிறதே என்ற கண்ணோட்டத்தில் பார்த்த சமூகம், படிப்படியாக ஏமாற்றப்பட்டுத்தான் வந்திருக்கிறது.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா? என்றவொரு பொதுவான கேள்வியைப் பற்றி நாமெல்லாரும் நன்கு அறிவோம்.

அது புலம்பெயர் சூழலில் நிறையவே நடந்துள்ளது. நடந்து வருகின்றது.
எழுத்துலகினுள் நுழைவதற்கு என்னென்ன வேண்டும் என்பதைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் பத்திரிகை நடத்தி எப்படி அதைக் காட்டிட முடியும்?
ஏதோ இந்நாடுகளின் சட்டங்களையும் வருமான வசதிகளையும் பக்குவமாகப் பயன்படுத்தித் தத்தமது பொருளாதார, சமூக உயர்வுக்காக வழி வகுத்துக் கொள்பவர்கள், தமிழ் வளர்க்கிறோம் என்றும், தமிழரை வளர்க்கிறோம் என்றும், தமிழ் இலக்கியத்தை வளர்க்கிறோம் என்றும் அவைபற்றி முன்பு எதுவுமே அறியாதவர்களாகவும் அவைபற்றிய அனுபவம் இல்லாதவர்களுமாக இருந்த அப்பாவிகளின் மத்தியில் கூலிக் கொடிகட்டிக் காட்டி, அதனால் அரிவரிகளும் ஆசிரியர்களும் சரிசமமே என்ற ஒரு மாயையை எழுப்பிவிட்டு விட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழத் துவங்கியிருக்கின்றது.

கருத்துக்களை எடுத்துச் செல்லவும் எடுத்துச் சொல்லவும் வேண்டிய எழுத்துக்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் சரியாகவும் ஐயந்திரிபறவும் முடிவெடுத்து எழுதப்பட்டால் மட்டுமே அந்த எழுத்துக்களில் உண்மை மிதக்கும்.

அதற்கு மாறாக, இன்னொரு ஏட்டிலோ இணைய வலயத்திலோ வாசித்ததை அப்படியே மாற்றுத் தமிழ்நடையில் எழுதியனுப்பிவிட்டு, நாங்களும் எழுதுகிறோம் அதனால் நாங்களும் எழுத்தாளர்களே என்று குதிப்பவர்களைச் சமீபகாலமாகக் காணக் கிடைத்து வருகின்றது! அறிவீர்களா?

தரமிகு பத்திரிகை ஆசிரியர்கள் சிலரும் வானொலியுட்பட கலையுலகில் இருப்பவர்கள் சிலரும் ஊக்குவிக்கும் முயற்சியாக எழுத்தார்வலர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பங்களை அனுபவமின்மையும் அடிப்படையின்மையுமான தகுதியீனங்களை மட்டும் வைத்துக்கொண்டு எதையோ எழுதியனுப்ப, அது வெளிவந்த அல்லது ஒலிபரப்பப்பட்டுவிட்ட சந்தர்ப்பத்தை அளித்த ஆசிரியர்களையும் நிகழ்ச்சியாளர்களையும் முற்று முழுதாக ஓரங்கட்டிவிட்டுத் தமது சாதனையின் வெற்றியே அது என்பதுபோல நடந்துகொள்ள விழையும் பலவீனங்களை பத்திரிகை ஆசிரியர்களும் வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர்களும் இனி வருங்காலங்களில் சற்று கூடுதல் அக்கறை எடுத்து தரப்படுத்த முன்வருதல் எதிர்காலத்திற்கு நல்லது.

இதில் காழ்ப்பில்லை. தற்காப்பிற்கான எச்சரிக்கையே இருக்கின்றது. காரணம், இப்படியே போனால் இலக்கியத்தை அடையாளம் காட்டிட ஏற்றவர்களே இல்லாமல் போய்விடலாம் என்ற அச்சமே அதிகமாக இந்தச் சூழ்நிலையில் உண்டாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த எச்சரிக்கையை நல்ல எண்ணத்துடன் இலக்கியப் பூங்காவினுள் நுழைய விரும்பும் எழுத்தார்வலர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, சுயமாக சிந்தித்து, தங்களை உயர் சிந்தனைக்குட்படுத்திக் கொள்ளவேண்டும். இதுதான் இன்றைய காலத்தில் அவர்களுக்கான கட்டாயம்.

ஒரு புதிய படைப்பாளியை ஊக்குவிப்பதற்காக, ஒரு பத்திரிகை அல்லது வானொலி அவரது படைப்புக்களை அடிக்கடி வெளியிடலாம். அது அவசியமும்கூட. ஆனால் அதையே தனது தகுதிக்குக் கிடைத்த பரிசுதான் என்று முழுமையாக நம்பி விடக்கூடாது புதியவர்.

அப்படியே நம்பினாலும்கூடப் பரவாயில்லை. அதை முன்வைத்து மற்றவர்களையும் விட, அதிலும் குறிப்பாக, வளர்ந்தவர்களையும் விட தாங்களே சிறந்தவர்கள் என்பதுபோன்ற ஒரு மாயையிலே மாட்டிக் கொள்ளக் கூடாது.

அவர்கள் எழுதும் போது, சொந்தமாக சிந்தித்து, சொந்தமாகக் கரு அமைத்து, சொந்தமாக உருக் கொடுத்து, சொந்தமாகவே படைப்புக்களை ஆக்க வேண்டும். அப்படிச் செய்தாலே படைப்பாளி அல்லது வெறும் பொறுக்கியாளி மட்டுமே என்பதை மறந்துவிடவே கூடாது.

இன்னொருவரின் படைப்பை அல்லது இன்னொரு பத்திரிகையில் அல்லது இணையவலயத்தில் வந்ததை அப்படியே எழுதியனுப்பி அல்லது சொல்லை மாற்றிப்போட்டு புதுவடிவு கொடுத்து உருவாக்க முனையக்கூடாது. சட்டியை மாற்றிவிட்டு, குழம்பே வேறு குழம்பு என்று நிரூபிக்கும் குறை நிறை கலை இதுவாகும்.

ஒரு படைப்பை ஓர் ஏட்டுக்கோ ஒரு வானொலிக்கோ அனுப்பினால் அது தனக்கே திரும்பி வந்தாலொழிய எழுதியவர் தமது அதே படைப்பை வேறெந்த ஏட்டுக்கோ வேறெந்த வானொலிக்கோ அனுப்பவே கூடாது.
இப்படியான சில பலவீனமான எழுத்துலகப் புதுவாசிகளின் படைப்புக்கள் ஒரே சமயத்தில் இரு ஏடுகளில் வருவதுமுண்டு. அதற்குக் காரணங்கள் இரண்டைக் குறிப்பிடலாம்.

ஒன்று, பத்திரிகை ஆசிரியர் படைப்பவரின் நேர்மையில் வைக்கும் நம்பிக்கையால் அதுபற்றிய சந்தேகம் எழாமையால் கவனிக்காமல் இருந்துவிடும் காரணம்.

மற்றது, படைப்பாளிக்குத் தனது படைப்பின்மேலேயே இருக்கும் அதன் தரத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை. இதனால் ஏதோ அதிர்ஷ்டச்சீட்டு எழுதிப் போடுவதுபோல, அவர் தமது படைப்பைப் பல பிரதிகளாகவும் எடுத்து நாலாபக்கமும் அனுப்பி வைத்துவிடுவது. இப்படிச் செய்பவர் தமது ஆக்கத்தை வெறும் அறிவித்தல் தாள் (நோட்டீஸ்) என்ற தரத்துக்கு இறக்கிவிடுகிறார்.
'பத்திலொன்றாவது தேறாதா?' என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் படைப்பாளிக்கு உரியதல்ல. வெறும் கொச்சைகளுக்கு மட்டுமே உரியது.

ஒரு மரியாதையை முன்வைத்து, உற்சாகப்படுத்தும் பத்திரிகைகள் அவற்றை வெளியிடும்போது அவை இன்னொன்றிலும் வெளிவந்திடும் சந்தர்ப்பவசங்களினால் தமது தரத்தையே பாதிப்புக்குள்ளாக்கிக் கொள்கின்றன. இதைத் தரமான என்ற வரிசைக்குள்ளிருக்கும் ஏடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது இப்படியே தொடர்ந்தால் பலநாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவது போல நிரந்தரமான இலக்கிய உலகத் தள்ளிவைப்பே இவர்களுக்குக் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எழுத்துலகின் அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராகத் திகழ வேண்டுமானால் பின்வரும் விடயங்களை நினைவில் வைத்திருங்கள்.

அ. ஆழ்ந்த அறிவு படைப்பதற்கு முதல் தகுதி என்பதனால் முதலில் அதிகம் வாசியுங்கள்.

ஆ. எழுத அமர்ந்தால் எதற்காக என்று தீர்மானியுங்கள்.

இ. அனுப்பும் பத்திரிகையில் வெளிவந்தாலே போதும்.

வானொலியிலே ஒலிபரப்பினாலே போதும் நாலுபேருக்கு நம்மைப்பற்றித் தெரிய வந்தாலே போதும் போன்ற 'போதும்'களுக்குள்தான் உங்கள் சிந்தனை சுழல்கின்றது என்று கண்டால் நீங்கள் எழுத முனையவில்லை என்றும், உங்களையும் நீங்கள் உங்களுக்காக எதிர்பார்க்கும் வாசக, ரசிக வட்டத்தினரையும் ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றும் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.

கீறிக் கீறி வைத்துவிட்டுத் தம்மைக் கவிஞர் என்பார் பலர் இன்றைய புலம் பெயர் இலக்கிய வட்டத்துக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான நோய் பிடித்த வண்டுகள். கீறலும் கோடுதான் ஓவியமும் கோடுதான். ஆனால் நீங்கள் எப்படி? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

இணைய வலய ஆக்கக் கள்ளர்களால் இந்த ஐரோப்பாவே ஆடிக் கிடக்கிறது. நீங்களும் இந்த 'ஐயகோ'க்களில் ஒருவரா? யோசித்துப் பாருங்கள். அதுவே உங்கள் தொட்டில் பழக்கமாக அதாவது ஆரம்ப எழுத்துலக பழக்கமாக இருந்தால் அதுமட்டும் தொடர்ந்து விடாமல் இப்போதே கைவிட்டு விடுங்கள்.

உங்கள் ஆக்கங்களை வெளியிடுவோரும் ஒலிபரப்புவோரும் ஆள் பஞ்சத்தினாலா அல்லது உங்களின் ஆக்கத்தின் தரத்தினாலா அவ்வாறு செய்கின்றார்கள் என்று நீங்களே உங்களின் ஆக்கங்களை சுதந்திரமாக ஆய்ந்து, பரிசோதனை செய்து, முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இதுவே எழுத்துலகில் உங்களை நிரந்தரப்படுத்தும்.

இவற்றை ஏன் சொல்கின்றேன் என்றால் இன்றைய புலம்பெயர் இலக்கியங்கள் முகவரி தொலைந்து போய்விட மாட்டாவா என்று ஏங்கிடும் எழுத்துலகின் இருள் மனங்களின் வெற்றிக்கு நீங்கள் இடம் கொடுத்துவிடக் கூடாது.

ஆழ்ந்து சிந்தித்து, சொந்தமாக ஆக்கங்கள் அமைத்து, இந்த சோலைக்குள் மலர்ச் செடிகள் பெருகிட வழி செய்யுங்கள். பிழை வழி நின்று இயங்கினால் புதர்களை நிறைத்து பாழாக்கிவிட்ட பெரும் பழிக்கு ஆளாகிவிடலாம் நாம்.
புலம்பெயர் இலக்கிய உலகம் தடம்பெயர்ந்து விழுந்து விடக்கூடாது.

பிம்பங்கள் பலவாக இருந்த போதும் உண்மையின் தரமவை கொண்டிரா போல் பிரதியாய் பலநூறு ஆக்கினாலும் உண்மையாய் நமதவை ஆகிடாவே!அம்புபோல் கருத்தினைக் கூர்மை வைத்து அறிவோடு எழுதுதல் ஆகவேண்டின் அறிவோடு சுயமாக ஆக்கம் செய்யும் ஆடையாளம் கொளலன்றேல் ஆகிடாதே!

(பிரசுரம்: பூவரசு, ஜேர்மனி)

(19.09.2004)
posted by Unknown @ 11:02 AM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்