எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
மண் கடந்ததும் கண் கெட்டவர்கள்
Montag, März 12, 2007
ல்லாண்டுக்காலமாக ஜெர்மனியில் வாழ்ந்துவிட்டு, இன்று ஜெர்மனியப் பிரஜையாகவே நான் ஆகியிருந்தாலும்கூட, என் நிறமும் என் குணங்களும் என்னை இதயத்துள் அந்நியனாகவே வைத்துக் காட்டுகின்றன.

எனது ஜெர்மன் நண்பர்களும் என்னிடம் எவ்வளவுதான் அந்நியோனியமாகப் பழகினாலும் இந்த அந்நிய மனப்பான்மையின் தாக்கம் நிறையவே உண்டு. தவிர்க்க முடியாத நெருக்கமும் அதே போல தவிர்க்கவே முடியாத தவிர்ப்புமாக அந்நியத்தின் தாக்கத்தை அனுபவிப்பவன் நான்.

இப்படியான சூழ்நிலையிலே, தாய்மொழியைக் கற்றுக் கொள்ளவே கிடைக்காமல் போய்விட்ட சூழ்நிலையிலே வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கு இருக்கிற சிரமங்கள் சொல்லிப் புரியாது.

அவர்கள் எவ்வளவுதான் வந்த நாட்டு மொழியில் தேர்ந்திருந்தாலும் தாய்மொழியின் இனிமையை உணர்ந்து, அதில் இலயித்து, ஏங்குவதை சொல்லிப் புரியாது. நீங்களும் அவ்வாறான குழந்தைகளின் பெற்றோராய் இருந்து, அந்தக் கடுமைமிக்க கொடுமையை அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.

சட்டங்கள் வழங்கிவிடும் சில உரிமைகள் நமக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் அவை செயற்கையானவையே. சட்டம் மாற்றப்பட்டால் அந்த உரிமைகள் காற்றோடு பறந்தும் விடலாம். அவ்வளவுதான்.

இங்கெல்லாம் வசதியான விசா கிடைத்துவிட்டவர்களில் பலரும் அது கிடைக்காத தமது இன மக்களையே இளப்பமாகவும் ஏளனமாகவும் பார்ப்பதும், விசா கிடைக்கும் வரை அப்பாவிபோல இருக்கும் சிலர், அது கிடைத்ததும் தாங்கள் ஏதோ குபேர பரம்பரையினர் போல இராஜநடை போட்டு நடந்து காட்டுவதும் வேடிக்கையான வெளிநாட்டுக் கேவலங்கள்.
நம்மை நாமே மதித்துக் கொள்வதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குள்ள முதல் தகுதி மற்றவர்களை மதிக்கும் மனப்பக்குவத்தை அடைந்திருப்பதுதான் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.

அயல்நாட்டுக்கு வந்து பாருங்கள். ஒரு நிறுவனத்தில் வேலை செய்கின்ற பலநாட்டு மக்களும் தாம் பொதுவாக சந்தித்துக்கொள்ளும்போது அந்நாட்டு மொழியில்தான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தத்தமது நாட்டு மக்களைச் சந்தித்து விட்டாலோ எவர் இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டார்கள். தமது தாய்மொழியிலே மட்டுமேதான் அதுவும் பிறமொழி எதையுமே கலக்காமல் சுத்தமாக அதில் மட்டும்தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் ....

இந்தத் திரைகடல் ஓடித் திரவியம் தேடும் செந்தமிழ்ச் செல்வங்களைப் பாருங்கள். அந்நியர் முன்னிலையில் தமது மொழியில் பேசுவதை ஓர் அவமானம் போல எண்ணிக்கொண்டு, தங்களுக்குள் ஆங்கிலத்திலோ ஜெர்மனிலோ அல்லது பிரெஞ்ச்சிலோ தான் பேசுகிறார்கள்.

மற்ற மொழிக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது நமக்கு அவர்களின் மொழி சரியாகத் தெரிந்திருந்தாலொழிய புரியாது.

இரண்டு தமிழர்கள் பேசிக்கொண்டால் அங்குள்ள அத்தனை நாட்டுக்காரருக்கும் முழுக்கதையும் புரிந்துவிடும். காரணம், இவர்களின் சுயமரியாதையுணர்வு அற்ற மனப்பான்மையால் தங்களுக்குள்ளும் அந்நாட்டு மொழியிலேயே வேண்டுமென்றே பேசிப் போலி கௌரவத்தைத் தேடுவதுதான்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை இப்படித்தான் அயல்நாட்டுத் தமிழர்களில் பலரும் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் கௌரவமா அவமானமா தென்படுகின்றது? இதை, இங்கே செய்தாலென்ன அங்கே செய்தாலென்ன ? எங்கே செய்தாலும் வெட்கத்துக்குரிய செயல்தானே!

என்றைக்கு நாம் நமது மனதில் சுயமரியாதைக்கு முதலிடம் கொடுக்கத் துணிகிறோமோ அப்போதுதான் எந்த வளர்ச்சியிலும் சொந்த வளர்ச்சிக்கான திட்டங்களைத் தேடும் மனப்பான்மை வளர முடியும்.

மிக உயர்ந்த நிலையிலிருந்த தமிழும் தமிழினமும் இன்று தனக்கென்ற ஒரு நாடுதானும் இல்லாதிருப்பதும் எங்கும் தனித்துவத்தை நிலைநிறுத்த இயலாதிருப்பதும் பிறமொழி ஊடுறுவலால் வந்ததென்பதல்ல. பிறமொழிக்குள் நமது கௌரவத்தையும் சுயமரியாதையையும் அடகு வைத்ததால் வந்த பலனேயாகும்.

இன்று தமிழ் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் திரைப்படப் பெயர்களிலும் பாருங்கள். வேண்டுமென்றே கவர்ச்சிக்காக ஆங்கில வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகப் பாவித்தே தலைப்பிடுகிறார்கள்.

ஆங்கில அல்லது வேறெந்த மொழிப் பத்திரிகைகள், திரைப்படங்களைப் பாருங்கள். தத்தம்மொழியின் மதிப்பைக் குறைக்கும்படியாக அவர்கள் அவ்வாறு செய்வதேயில்லை. தமிழருக்குள் புகுந்துவிட்ட, தமிழ் தெரிந்த அன்னிய தமிழ் விரோதிகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்த் துரோகிகளும் கூடத்தான் பத்திரிகைகளில் தமிழின் தனித்துவத்தைத் திட்டமிட்டுக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்றுகூட எண்ண இடமிருக்கின்றது.

தமிழ் படிக்கும் போது தமிழைத்தான் படிக்க வேண்டும். தமிழால் ஆங்கிலம் படிக்குமளவிற்கு ஆங்கிலமோ இதர அன்னிய மொழிகளோ தரம் குறைந்தனவல்ல. ஆங்கிலேயன் தன்மொழியால் தமிழ் படிக்கவில்லை. வேறெந்த மொழியினனும் தன்மொழியால் தமிழ் படிக்கவில்லை.
நாம் மட்டும் ஏன்? இரவல் கோவணம் மானத்தை மறைத்தால் அது தற்காலிகமே.

கோவணம் பறிபோகும்போது, கூடவே மானமும் போகும். இந்த உணர்வு கேவலமானது. அவமானமானது. வெட்கத்துக்கு உரியது.

மானவுணர்வு நம்மை இனியாவது தூண்டி எழ வைக்காதா? எழுத்தாளர் விரல்களைச் சுட்டு வைக்காதா? நமது கண்கள் திறந்திருக்கின்றன. ஆனால் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். இது சரியல்லவே!.

சொல்வார் சொல்லட்டும்; கேட்பார்க்கு மதி வேண்டும்.

தெருவுக்கொரு மேடை கட்டி, முக்குக்கொரு சங்கம் வைத்து, தாமே தமிழ் வளர்க்கும் மேதாவிகள் என்று பறையடிக்கும் பரிதாபிகள் அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்றபடியாகவே திட்டங்கள் அமைத்து, சட்டங்கள் இயற்றி, சிந்திக்கத் தெரியாத மக்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு, அவர்களைச் சிந்திக்க முடியாதபடி செய்துவைத்துக் கொண்டு, மிகவும் திறமையாக சமுதாயத்தை ஏய்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றார்கள்.

மக்களின் மத்தியில் இவர்கள் தாம் திட்டமிட்டபடி, பகைமையையும் வெறுப்புணர்வுகளையும் புரிந்துணர்வின்மையையும் விதைத்துக்கொண்டே, உலகளாவிய சேவையாளர்களாக உலகத்தையே ஏய்த்துவிட முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

கடல் கடந்து வாழ்பவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளைப் போல, எண்ணி ஏமாந்து நிற்கும் தாயக மக்களின் அறியாமையின் பலவீனத்தை இவர்கள் மிக நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

வெறும் அரச பிச்சையில் வாழ்பவன்கூட, உயர்ந்த கட்டிடத்தின் முன்நின்று படமெடுத்து அனுப்பிவிட்டு, அக்கட்டிடம் தனது அலுவலகம் என்று நம்ப வைக்கப் பார்க்கிறான்.

நான் தமிழகம் வந்திருந்தபோது, ஒரு ஜெர்மன் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தார்கள். அன்னார் டாக்டருக்குப் படிக்கிறாராமே என்றார்கள். எனக்கு அவரைத் தெரியும். அவர் இங்கேயுள்ள ஒரு உணவகத்தில், ஒரு தட்டுக்கழுவி என்பதும் தெரியும்.

இவர் எப்படி டாக்டராக....? கொஞ்சம் கூட விசாரித்துவிட்டு ஆவன செய்யுங்கள் என்று மட்டுமே சொல்லிவிட்டு வந்தேன்.

இன்னொரு மாப்பிள்ளைக்குப் பெண் பேசப்படும் போது கூறப்பட்ட பட்டம் "மாப்பிள்ளை கார் வைத்திருக்கிறாராம்"

அங்கே கார் ஆடம்பரப் பொருளாயிருக்கலாம். இங்கே அது அத்தியாவசியப் பொருள். அதுவும் எவரும் எப்போதும் எதுவித தடையுமின்றிக் கடனுக்கு வாங்கிவிடக் கூடிய மிகச் சாதாரணமான பொருள். இதை எப்படி உயர்வாகக் காட்டி, இங்குள்ள குப்பைகளுக்கு அங்கெல்லாம் மலர் வளையம் சூட்டுகின்றார்கள் என்பதைப் பாருங்கள்.

பெண் கொடுப்பதும் பெண் எடுப்பதும் வெளிநாட்டில் வாழ்கிற ஒரே தகுதியை மட்டும் வைத்து எடுக்கப்பட்டால், பெரும்பாலும் புதர்கள் பூஞ்சோலைகளாகவும் கருங்கல் வைரமாகவும் கழிநீர் குடிநீராகவுமே காட்டப்படும் என்பதை தயவு செய்து அவதானித்துக் கொள்ளுங்கள்.

பிழைப்புக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட சிலதுகள், இங்கு வந்தபின், பணத்தில் சற்று உயர்வு கிடைத்ததுமே உலகமகா மக்கள் போலவும் தாய்மொழியிலே கற்றறியேன் தமிழறியேன் ஆங்கிலமே நானறிவேன் கால்மேல் கால்போட்டுத்தான் காரியமாற்றுவேன் என்று நம் மக்களிடமே நாக்கூசாது பொய்யுரைத்து பெயர் தேட விழையும் காட்சிகளும்கூட இங்கெல்லாம் சகஜமாகவே இருக்கின்றன.

இவர்களில் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் இந்தப் போலிகளின் தாக்கத்தால் பல நல்ல உண்மை இதயங்கள் பாதிக்கப்படுவதும் நடக்கின்றதே என்பதைக் காண்கையிலேயே கவலையாகவும் ஆத்திரமாகவும் இருக்கின்றது.
பொய்மையின் பொக்கிஷங்களெல்லாம் புதுவுலகப் பிறவிகளாக வலம் வரும் வெளிநாட்டு வாழ்க்கையில் கவர்ச்சி இருக்கலாம். உண்மையான கௌரவம் இருக்கின்றதா?

வெட்கத்துக்குரிய கௌரவமல்லவா இது!
இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால்-
தமிழ்; வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, வேறு பிறமொழியறியாத போலியர்கள் பலர் பிறர் மொழிகளைப் பழித்துத் தமிழைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில்மட்டும் வீராவேசமாகக் கோஷம் போடுவதும், வெள்ளைக்காரனிடம் கைகட்டி வாய்பொத்தி உதவிக்காக நிற்பதும்தான்.

தமிழ் மக்களிடம் ஒரு விதமாகவும் வெள்ளைக்காரர்களிடம் இன்னொருவிதமாகவும் நடந்து கொள்ளும் இந்த மேதாவிகள் தம்மை விட்டால் யாருமில்லை என்ற மாயையைப் பல இடங்களில் இங்குள்ள சட்டங்களை வைத்தே உருவாக்கிப் பரவ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் இவர்களை அடையாளம் காண்பதில் தவறு செய்தால் சமுதாயத்தை விழுங்கி ஏப்பமிடும் புதியதொரு சமுதாயம் உருவாகிவிடும் ஆபத்து நிறையவே இருக்கிறது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

இங்கே வெளிநாடுகளில் புத்தம்புதுக் காளான்களாகப் பல மதப்பரப்பிகளின் சங்கங்கள் வழிநெடுக கொத்தவால் சாவடிச் சில்லறைக் கடைகளைப் போல நிரம்பி, வழிந்து கிடக்கின்றன.

" நோயா? வைத்தியர் வேண்டாம் நாமிருக்கப் பயமேன்? " என்று இந்தப் பரப்பிகள் பசப்ப, அதை நம்பி ஓடவும், ஓர் ஏமாளிக் கூட்டம் உண்டு.

விசா கிடைப்பதில் பிரச்சினையா? இவர்களுடன் ஒட்டினால் அவர்கள் மேலே கடவுளுடன் பேசி ஆவன செய்து தந்துவிடுவார்கள்.

கடன் தொல்லையா? நேரே அங்கே ஓடுங்கள். ஒரே செபத்தில் எல்லாமே சரிவந்து விடும்.

இப்படியாக வைத்திய மனைகளும் வங்கிகளும் தேவைப்படாத அளவுக்கு பக்தி முற்றி நிற்கும் சபைகள் இங்கெல்லாம் உண்டு. சில நல்ல கள்ளர்கள் இவற்றை நன்கு பயன்படுத்தியும் கொள்கின்றார்கள்.

இன்னொரு புறத்தில்...

இந்தக் கூட்டங்களை எதிர்த்து "நாம் இந்துக்கள் நமது சமயமே உண்மை" அது இது என்று கொதிக்கும் இன்னொரு எதிர்ப்படையும் இருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இந்துமதக் காப்பாளர்கள் நத்தார் பண்டிகைக்காக அரசாங்கம் காசு கொடுக்கும்போது, முன் நின்று கையொப்பம் இட்டு விட்டு, எம்மதமும் சம்மத வாசிகளாக அரச உதவிக் காசைச் சுருட்டிக் கொண்டு நடையைக் கட்டுவதுதான்.

காசுக்கும் உதவிக்கும் மதபேதமில்லை. பணம் பெற்று வந்தபின் திரைமறைவில் மதாதி வீரர்களாக தோற்றம்.

தெய்வ நம்பிக்கைக்கும் இம்மனிதர்களின் செய்கைகளுக்கும் முடிச்சுப் போடப்போனால் எல்லாருமே நாத்திகராகவே மாறிப் போவார்கள். அத்துணை இத்தியாதிகள் இங்கிருக்கிறார்கள்.

கல்வியிலும் சரி, கடவுள் பக்தியிலும் சரி, நிதானமும் பொறுமையும் மதித்தொழுகும் பண்பும் இருந்தாக வேண்டும்.

மனதில் இல்லாத கடவுளை மதத்தில் தேடுவதும், கருத்தே இல்லாத நோக்கத்தோடே கல்வியைத் தேடுவதும், வெறுங் கயிற்றைக் கடலில் வீசி மீன்பிடிக்கும் முயற்சியேயாகும்.

எதிர்பார்ப்பு பிரமாதமானதாயிருக்கலாம். ஆனால் நிறைவேறுமா? அது சாத்தியம்தானா?

நாம், நமது, நமக்கு என்று சில உண்டு. அவற்றை நம்மால் இயன்றளவுக்குப் பின்பற்ற முயல வேண்டும். எங்கு சென்றாலும் எங்கு நின்றாலும் தன்னிலை தவிர்த்துக் காட்டிப் பெருமை தேடல் கூடாது.

நமது தனித்துவத்தில் குறையிருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்வதை விடுத்து தனித்துவத்தையே விடுத்துவிட்டு, அன்னியத்தில் நம்மைப் பிரதிபலிக்க முற்படுவது முகமூடியை முகத்தின் முன் வைத்துக் கொண்டு, நான் வேறு ஆள் என்று அடையாளம் காட்டிக் கொள்ள முற்படும் பலவீனமேயாகும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

மதித்து நடத்தலை விட்டு மதிப்பிறங்கி நடத்தல் நல்லதல்ல. அல்லவா!

(இவ்வாக்கம்: எழிலனின் 'பலவீனப் பவிசுகள்' நூலில் வெளிவரவிருப்பது.)

(29.09.2004)
posted by Unknown @ 10:51 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்