எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
கசக்கப்படும் கவிதை மலர்களும் கூவ முயலும் காகங்களும்
Dienstag, März 13, 2007
ற்பனை என்னும் வாகனம் எங்கும் செல்லும். எதையும் தாண்டும். எங்கும் நிற்கும். எப்படியும் ஓடும். ஆனால் அந்த வாகனத்தில் கவிதை என்ற ஆசனம் சரியாக இருந்தால்தான் சொகுசான பயணம் கிடைக்கும். சொகுசின் சுகம் தெரியும். புரியும்.

வாகனத்தில் ஏறுபவர்களெல்லாம் சொகுசாகப் பயணிப்பதில்லை. அதற்கேற்ப ஆசனம் அமைந்தால் மட்டுமே அது சாத்தியம். சொகுசுக்கு ஏற்ற ஆசனம் இல்லாதவர்கள் தாங்களே பலகைத் தட்டு ஒன்றை ஆசனமாக அமைத்துக் கொண்டு அதுதான் சொகுசு என்று நினைத்துக் கொண்டால் அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதால் நாம் அதில் தலையிட முடியாது. ஆனால் அதுதான் சொகுசு ஆசனம் என்று அவர்கள் அதிகப் பிரசங்கித் தனமாக மற்றவர்களும் ஏற்க வேண்டுமென்று வற்புறுத்த முற்பட்டால்தான் வருகின்றது வம்பு.

இது இதுதான் என்றும் இது இப்படித்தான் என்றும் சில நியதிகள் இருக்கின்றன. அவற்றில் சிறிது விட்டுக் கொடுப்புக்கு இடம் இருந்தால் அதற்கு அந்த நியதியின் சிறப்புக்குள் இயலாதவர்களும் நுழைந்து கொள்ள அனுமதிக்கும் ஒரு பெருந்தன்மையே காரணம். இலக்கிய அன்னையின் தாராளம் கவிதைகள் விடயத்தில் இப்படித்தான் இருக்கின்றது.

இதைத் தவறாக எடுத்துக் கொண்டு கிறுக்கல்கள்தானே ஓவியம். நானும் கிறக்குவேன். அதையும் ஓவியமாக நீங்கள் ஏற்கவே வேண்டும் என வற்புறுத்தினால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது?

புலம் பெயர் இலக்கியத் துறையில் புதிய இளமொட்டுக்கள் பரவலாகப் பரந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்டு வருவதைத் தவறாகப் பொருள்படுத்திக் கொண்டு கீறல்களையும் கிறுக்கல்களையும் கவிதைகளாக அறிமுகப்படுத்தப் பார்க்கும் பலவீனர்களின் புதிய படையெடுப்பு இலக்கிய ஆர்வலர்களால் எச்சரிக்கையுடன் அவதானிக்கப்பட வேண்டிய நேரம் வந்திருப்பதாகத் தெரிகின்றது.

நமது பூவரசு ஏட்டில் இந்தப் புதிதாகப் பரவிவரும் ஹைக்கூ கவிதைகள் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. ஆழமான கருத்துக்களுடன் திரு காருண்யன் அவர்கள் எழுதியிருந்தார். ஆதங்கம் அவர் கருத்துக்களில் மிகக் கனமாக மிதந்து இருந்தது. அந்தக் கட்டுரையை ஆய்வது எனது நோக்கமல்ல. ஆனால் அது பெரிய தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்தியதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

அழகாக எழுதுவது வேறு கவிதை எழுதுவதென்பது வேறு. ஆழமான கருத்துக்களை அளவான வரிகளில் அழகாக வடித்துத் தரும் எழுத்துச் சிற்பமே கவிதை என்று ஆகின்றது. அதனை வெறுமனே வெட்டிக் கொத்திக் குவித்துவிட்டு சிற்பமாகக் கற்குவியலைக் காட்ட முயற்சிப்பதை ஒரு விபத்தாகக் கூட அனுமதிப்பதில் நியாயமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

புதுக் கவிதை என்பதைக்கூட விஷய ஞானத்துடன் விநயமாக அமைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு விஷயமே இல்லாதவர்களும் கவிதை விதிகளைத் தொடர இயலாதவர்களும்கூட புதுக்கவிதை என்று பாவினை காட்டிக் கொண்டு தங்களின் ஆற்றலின்மைக்கு அங்கீகாரம் தேடுகின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆத்திரம்தான் வருகின்றது.

நமக்கென்று நல்ல விதிகள் இருக்க நாம் பிறரின் விதிகளை விளக்கமின்றிப் பின்பற்றி வெற்றிகாணப் புறப்படுவது பாசிக் கொடியைப் பற்றிக் கொண்டு பரந்த கடலைக் கடக்க முயலலும் ஒரே விதமான மடைமையே எனலாமா அல்லது அறியாமையின் வெளிப்பாடு எனலாமா என்று எனக்கு விளங்கவில்லை.

முதலில் இந்த ஹைக்கூ என்ற சொல்லுக்கே அர்த்தம் கேட்டுத்தான் அதுவும் அதுபற்றியவரிடம் இருந்து கேட்டுத்தான் தெரிய வேண்டிய நிலை. அந்த நிலையில் மூன்று வரிகளை மட்டுமே அனைத்துமாக எடுத்துக் கொண்டு
முக் என்று முனங்கியது கோழிஉடனடியாய்வந்து விழுந்தது முட்டை
என்பதுபோல என்னென்னவெல்லாமோ துளித்துளி அர்த்தமின்மைகளுக்கு அர்த்தம் இருப்பதாக அமளிப்படுத்துவதில் தமிழ்க் கவிதைகளுக்கு நன்மை கிடைக்குமா அல்லது அப்படிக் கிடைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா என்று கவனித்தால் வெறும் அனாவசியத்தை வலிந்து இழுத்து நம்மை நாமே கொச்சைப் படுத்திக் கொள்வதில் ஒருவித திறமையைக் கனவாகக் காண விழைகின்றோமா என்ற சந்தேகமே எழுகின்றது.

குக்கூ கவிதைகள் என்றோ குயில் கவிதைகள் என்றோ கூறிக் கொண்டு குயில் கூவுவதுபோல சுருக்கமாக எழுதினாலாவது தமிழ் புரிந்த அர்த்தம் இருக்கும். ஜப்பானைத் தலையில் வைத்து தமிழை எழுத்தில் வைத்து ஒரு கலவைச் சமையல் செய்வதும் அது ருசிக்கிறதா இல்லையா என்பதை நாமாகவும் இல்லாமல் ஜப்பானியர்களாகவும் இல்லாமல் எவ்வழியில் ருசிப்பது என்று தவிப்பதில் என்ன நன்மை இருக்கின்றது?

அந்த ஜப்பான் எதைச் சொல்கின்றது என்பதுகூடத் தெரியாமல் ஜப்பானின் கவி வழியில் நம் கவிதையை இழுப்பது கயிறென்று நினைத்துப் பாம்பை இழுப்பதற்குச் சமமல்லவா?

படி தெரிந்து ஏறினால் பாதகமின்றி ஏறலாம். படியறியாதேறினால் படிதவறி வீழலாம். கவி எழுதும் ஆற்றலும் அறிவின் ஆழமும் நெருங்கிய தொடர்புடையன.

அறிவு புகட்டும் தெளிவினைச் சிறுவுரு கொடுத்து சிறப்புடன் எழுத முனையும்போதுதான் வசனங்கள் கவிதைகளாகின்றன. கவிதைகளாக அவை அமையும்போது அவை தமக்கென சில வித்தியாசமான அசையுருக்களை ஏற்க வேண்டிய கட்டாயம் எழுகின்றது.

அதையே கவிஞன் சரியாக அமைக்க வேண்டும். அதில் தவறினால் கல் கட்டிடம் என மணல் கட்டிடத்தை அடையாளம் காட்ட வேண்டிய பலவீனமே ஒரு நிர்ப்பந்தமாக அவனுக்கு ஏற்படும்.

புலம் பெயர் மண்ணில் வெறும் தாளும் பத்திரிகையாகலாம் என்கின்ற நிலை சில இடங்களில் இருக்கின்றதை நாம் அறிவோம். தரத்தை விடவும் இடத்தை நிரப்புதலே முக்கியம் என நினைக்கும் நவீன இலக்கிய தரகர்கள் சிலர் தாங்களும் ஆசிரியர்களே என்று வெறுமனே காட்டிக் கொண்டு அலைகின்றார்கள். படிப்புக்குப் பட்டம்போல அவர்களுக்கு இந்தப் போலித் தகைமைகள் உதவுவதாக அவர்கள் நினைக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட பலவீனத்தின் பிரதிபலிப்புக்கள் எழுத்துலகிற்குள் விபரமில்லாத வழிகாட்டிகளாக வரும்போது எதையாவது எடுத்து இடத்தை நிரப்பினால் போதும் என்ற நிலை இயல்பாகவே எழுந்துவிடுகின்றது. பிறகென்ன? யாராவது எதையாவது எழுதித் தர மாட்டார்களா என்று அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு அலைகின்றார்கள்.

இந்த பலவீனமே பல சாதாரணங்களை அசாதாரண நிலைக்கு செயற்கையாக எழுப்பிவிடுவதாகக் காண முடியும். எவருக்கும் உயர்வு வருவது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் உயர்வு ஏற்றதாக இல்லாதபோது ஏற்றவர்களுடன் சமமாக அவர்களும் நிற்க முயல்கையில்தான் பிரச்சினை வருகின்றது. அந்த விதக் கண்ணோட்டம் சில சமயங்களில் சில நல்ல இதயங்களைக்கூடப் புண்படுத்தி விடுவதுண்டு.

காகமும் குயிலும் சமமென்றால் கரைதலும் கூவலும் சமமாமோ?
மிகத் திறமை மிக்க எழுத்தாளர்களும்கூட தங்களுக்குச் சரிவராத விடயங்களுக்குள் தமது கையை நுழைத்துக் கொண்டு அவதிப்படுவதுண்டு.
கட்டுரையில் சிறப்பு காட்டும் ஒருவர் சில சமயம் கவிதையில் சோடை போகலாம். கவிதையில் சிறந்தவர் கதை எழுதுவதில் இயலாமல் இருக்கலாம். சிலர் பலதிலும் சிறப்பாக ஒளிரவும் செய்யலாம்.

ஆனால் அடிப்படை இல்லாமல் எழுதும் நிலை இதயத்தில் வளர்ந்தால் எழுத்தாழம் மறைந்து எழுத்தாளர்களாக நினைப்பவர்களின் தரம் தாழ்ந்து விடலாம்.

இதை எழுதும் போது எனது மனம் மிகவும் கவலைப்படுகின்றது. உண்மையான எழுத்தார்வமும் எழுதுவதாகக் காட்டிக் கொள்ள விழையும் ஆர்வமும் வேறு வேறு. இதனால் எழுத்துலகின் திரையில் படங்களும் வெறும் புள்ளிகளும் சமமாகக் கணிக்கப்படுகின்ற பேராபத்து வருகின்றது.

புரியாத பார்வைக்கும் குருட்டுத்தனத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

எழுத்தாழம் சரியாக அடையாளம் காணப்படாவிட்டால் எது எது என்று காணப்பட முடியாத நிலை வளர்நது புலம் பெயர் இலக்கிய சோலை புதர் நிறை காடாக ஆகி விடுமோ என அச்சமாக இருக்கின்றது.

எழுதும் எவரையும் தடுப்பதோ தவிர்ப்பதோ எனது நோக்கமல்ல. ஆனால் எழுத்துக்களில் உயிர் ஊட்டும் கலையில் தேர்ந்து விட்டு வெளிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அறியாத அன்னிய வழிகளை வரிந்து கொண்டு அதுதான் சரியென்றும் நினைத்துக் கொண்டு எழுதுவதாக நினைத்துக் கிறுக்குவது கவிதை எழுதுவதல்ல என்பதை மிகவும் கவனமாக நமது புலம் பெயர் இலக்கிய எழுத்து ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரிசி சோறாகாது ஒழுங்காக சமைக்காவிட்டால். கருத்து கவியாகாது அமைப்பு சரியாக அமையாவிட்டால். நீர்தான் வெள்ளமாகின்றது. ஆர்வம்தான் எழுத்தாளுமை பெறுகின்றது.அதற்காக நீர் தன்னை வெள்ளமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. ஆர்வத்தை எழுத்தாளுமையாக நினைத்துவிடக் கூடாது.

எழுத்துலகின் புதிய மலர்கள் நிமிர்ந்து நின்று கவிதைகளைக் கருத்துக்களை நிறைத்துச் சரியாக அமைத்தால் அதனால் தமிழ் இலக்கிய உலகிற்கு நலமிருக்கும். பிரதி பண்ணுவதும் பின் தொற்ற முயலுவதும் உங்களின் தனித்துவத்தைத் தகர்க்குமேயன்றி வளர்க்காது. தயவு செய்து எச்சரிக்கையாக எழுதுங்கள்.

இதனை இதயத்தில் வைத்து எழுதும் ஆர்வம் உறுதியானால் புலம் பெயர் இலக்கிய மண்ணும் உறுதியாகும்.நடக்குமா?

ஒரு சின்ன விண்ணப்பம். புதிய எழுத்தார்வலர்களுக்கு எழுத்தாளுமை வரும் வரைக்கும் அவர்களை ஊக்குவிக்கவென்று ஒரு தனி ஏடு வெளி வந்தால் என்ன?

புது மலர்கள் என்று பெயர் கூட வைக்கலாமே!. தரம் உயர்வதாக உறுதியானால் அவ் ஏடே அவர்களை சிபாரிசு செய்து பிரபல்யப்படுத்திக் கைகொடுத்து உதவ முடியுமே!

கொச்சைத் தமிழே வெளியாகும்கொச்சைக் கருத்தே கவியானால்எச்சம் எடுத்தே உரம் பெறலாய்எழுத்தை இறக்கம் செயலாமோ?

பதம் தவறினால் இனிப்பும் கசக்கக் கூடும்.இதம் தவறினால் கவிதையும் உருவிழக்கக் கூடும்

இதை நினைவில் வைத்து ஹைக்கூ தவிர்த்து குக்கூ கவிதைக்கு வாருங்களேன்.நாம் நாமாக நடக்கத் தக்கதான நம் வழியில் எழுதுவது நமக்கேன் கசக்கப் போகின்றது?

(நன்றி: பூவரசு)

(21.10.2004)
posted by Unknown @ 12:52 AM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்