எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
ஊடுருவும் எழுத்தே ஆழமானது
Mittwoch, Oktober 31, 2007
ழுத்துக் கலையானது மிகவும் விருவிருப்பான ஒரு விளையாட்டு. இதில் எவரும் பங்கேற்க முடியும். இதில் தவழலாம்; நடக்கலாம்; ஓடலாம். ஆனால் சோர மட்டும் கூடாது. தவழ்பவர் முதலில் எழுந்து கொள்ளவும் பிறகு நடந்து கொள்ளவும் பக்குவப்பட்டதன் பிற்பாடுதான் ஓடத் துவங்க வேண்டும். இல்லையேல்.... வேறென்ன? அம்போ! அவ்வளவுதான்.

ஆற்றுக்குள் இறங்கிக் குளிக்க ஆர்வம் வந்தால் முன்பின் யோசிக்காமல் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையோடு தொப்பென்று குதித்துவிடல் புத்திசாலித்தனமல்ல. அதற்குள் சேறு இருக்கலாம். கூரிய மரக்குச்சிகள் புதைந்து நீட்டிக் கொண்டிருக்கலாம். கூரான பாறையொப்ப கற்கள் இருக்கலாம். குழிகள் இருக்கலாம். முதலை போன்ற ஆபத்தான உயிரினமேதும் கூட இருக்கலாம்.

ஆழமறிந்து அகலமறிந்து இறங்கினால் ஆபத்தைத் தவிர்க்கலாம். குளித்தின்பம் அடையலாம். இல்லாவிட்டால்? அதிர்ஷ்டமிருந்தால் நல்லது. அல்லது ஐயகோதானே!

ஆசை வேறு. ஆர்வம் வேறு.

எழுதுதல் வேறு. எழுத்தாளுமை வேறு.

சிந்தனை வேறு. சிந்தனையாற்றல் வேறு.

ஒரு வேடிக்கையான உதாரணக் கதையைக் கேளுங்கள். ஒரு கடையில் பல சில்லறை ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் நீண்ட காலம் அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குள் சிலர் சின்னச் சின்ன திருட்டு வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தொலைபேசியில் வரும் விண்ணப்பங்களுக்கு (ஆர்டர்) பொருட்கள் கொண்டு செல்லும் சாக்கில் கூட ஒன்றிரண்டு பொருட்களைப் போட்டுக் கொண்டு போவது மாலையில் வேலை முடிந்து போகும் போது எதையாவது சிறிதான பொருளைச் சுருட்டிக் கொண்டு நகர்வது இப்படிப் பல சிறு சிறு கைங்கர்யங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் புதிதாக ஒருவர் அங்கே வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வாரத்துக்குள் அவர் கண்களுக்கு இந்தக் கூத்துக்கள் தென்பட்டு விட்டன. இவரும் அவர்களுடன் ஒரு கோவிந்தா தானே! அதனால் அவர்கள் இவரை அதிகம் இலட்சியம் செய்யாமல் தத்தமது கடமைகளுடன் இந்த வழமையான வேலைகளையும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

எல்லாப் புதுத் தொழிலாளர்களும் காட்டும் 'ஆரம்ப நேர்மை' அவரது மண்டையைக் குடைந்தது.

மெதுவாக அந்நிறுவக மேற்பார்வையாளரின் காதில் நடந்து வரும் சங்கதியை ஊதி விட்டார்.

இவர் அவரிடம் பதிலாக எதிர்பார்த்தது ஒரு சபாஷைத்தான். ஆனால் அவரோ இந்த புத்தம்புது நேர்மையின் தலையில் சொட்டுச் சொட்டாகக் கொதிக்கிற எண்ணெய்யை விட்ட கதையாக இரகசியமாக ஒரு மூலைக்கு அழைத்துத் திட்டோ திட்டென்று திட்டித் தீர்த்து விட்டார்.

"ஏய் முண்டம். உன் வேலையை மட்டும் நீ பார்த்துக் கொண்டு போ. மற்றவர்களைப் பற்றி அதை இதைச் சொல்வதை இன்றையோடே நிறுத்திக் கொள். அவர்களுக்குத் தெரிந்தால் உன்னை ஒரு மூலைக்கு இழுத்துப் போய் பாரமான எதையாவது தலையில் போட்டுக் கொன்றாலும் கொன்று விடுவார்கள். முதலாளியிடம் போனாயோ அவ்வளவுதான். அவர்களுக்கல்ல. உனக்குத்தான் சீட்டு கிழியும். ஜாக்கிரதை!"

நேர்மை நாயகருக்கு முழுத்தலையுமே கழன்று விட்டாற் போன்ற பெரிய அதிர்ச்சி. 'என்னடா இது? நியாயத்துக்கு இங்கே இடமேயில்லையே!' என்று பெரிய கவலை. பிறகு 'நமக்கென்ன நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாதா? நமக்கேன் ஊர் வம்பு?' என்று தனது ஞானக்கண்ணைச் சற்றே திறந்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

அவரது சிந்தனையில் அவருக்குப் புத்தி சொன்ன மேற்பார்வையாளர் எதற்காக அப்படிச் சொன்னார் என்பது புரியவில்லை. வேலிகளே பயிரை மேய்வது என்பது மனிதரில்தான் சாத்தியம் என்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்காததுதான் காரணம். அனுபவ வறியர்.

கொஞ்சக் காலம் கடந்தது. இப்போது நமது நேர்மை கொஞ்சம் 'சீசன்' ஆகிவிட்டார். அவ்வப்போது நடக்கும் 'சிறுசிறு'க்களுக்கு இவரும் இலாபம் கருதாத ஒத்துழைப்பாளரானார். உதாரணமாக பத்து டின் சீஸ் என்று ஆர்டர் வந்தால் கடத்தும் கூட்டாளியின் கண்சாடை வேண்டுகோளின்படி பன்னிரண்டை எடுத்து அடுக்கி விடுவார்.

காலம் நகர்ந்தது. சக ஊழியர்கள் இவருடன் நல்ல நட்பு. ஒத்துழைப்பு கொடுத்த பலன். ஆனால் வேறு எதுவுமே இல்லை. படிப்படியாக நமது நேர்மையருக்கும் சபலம் தட்டத் தொடங்கியது.

முதல் தடவையாக சிந்தித்தார் அவர். பலரும் மாலையில் விடைபெற்று வெளியேறும்போது பயமில்லாமல் தங்கள் பைகளில் அதை இதைப் போட்டுக் கொண்டு முதலாளியின் முன்பாகவே கடந்து போகிறார்களே! எப்படி?

அவரது அறிவு இப்படி பதில் சொன்னது. 'அவர்கள் ஒளித்து எடுத்துக் கொண்டுபோனால்தானே; சந்தேகம் வரும். ஆகவே பயமின்றி சாதாரணமாகப் போவதுபோல போனல்தான் சரி என்றிருக்கும்'

அன்றே நமது சிந்தனையாளர் முடிவெடுத்தார். 'இனியும் நாம் சும்மா இப்படி இருப்பதில் அர்த்தமே இல்லை. நாமும் பின்பற்றி வெற்றி வாகை சூடுவோம். மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எடு.'

அடுத்த நாள் மாலை. கடை பூட்டப்படுமுன்பு ஐயாவுக்கு ஒரே படபடப்பு. ஒரு மூலையில் ஒரு பெரிய கட்டி லக்ஸ் சவர்க்காரத்துண்டை எடுத்து 'ரெடி' பண்ணிக் கொண்டார். எல்லாரும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருக்க இவரும் இடையில் அவர்களுடன் தன்னைச் சொருகிக் கொண்டார்.

'போயிட்டு வாறேன் மொதலாளீ!' என்றவர் என்ன முழி முளித்தாரோ! முதலாளி கேட்டார்

"ஏய் திரும்பு! என்னது ஒன் சட்டைப் பையிலே?"

நமது மனோகரன் பச்சை மின்சாரக் கம்பிச் சுருளுக்குள் விழுந்துவிட்ட எலிக்குஞ்சாகக் கதறினார்.

"ஒண்ணுமில்லீங்களே!"

முதலாளி எழுந்து வந்து அவரது சட்டைப் பைக்குள் கையை விட்டு சவர்க்காரத்துண்டை எடுத்துவிட்டு இராமன் விட்ட அஸ்திரமாகச் சுடோ சுடுவென்று சுட்டார். சுற்றி நின்ற பட்டடாளங்கள் நகைத்துக் கொண்டிருக்க அவருடைய சீட்டைக் கிழித்து விட்டு வீட்டுக்கு அனுப்பினார்.

இராமன் இராவணனை நோக்கிச் சொன்னானாம், " இன்று போய் நாளை வாராய்“ என்று.

முதலாளி சொன்னார், "இன்றைக்குப் போ! இனி என்றைக்கும் வராதே!"

நமது சிந்தனையாளர் நன்கு திட்டமிட்டு மிக மிகச் சரியாய்த்தான் தமது செயல்பாட்டை நடத்தி இருந்தார். ஆனால் அது படுதோல்வியில் முதல் நாளிலேயே முடிந்தது ஏன்?

வீடு திரும்பும் வழியில் தலையை இரண்டாகப் பிளந்தபடி சிந்தித்தும் அவருக்குப் புரியவே இல்லை.வரவேற்ற மனைவியின் முகத்தில் தன் கணவரின் அபார சாமர்த்தியத்தின் தாக்கம் புரிந்துவிட்டதை உணர்ந்தவர் மெதுவாக அவளிடம் நடந்த கதையை விபரித்தார்.

அவள் அமைதியாகச் சொன்னாள்.

"மடச் சனியன் மனுசனே! என்ன ஷேர்ட் போட்டிருக்கீர்? மூளையே கிடையாதா?"

ஞானக் கண்ணர் சட்டெனக் குனிந்து தனது சட்டையைப் பார்த்தார்.

அடடா! சுத்த நைலான் சட்டை. கண்ணாடி போல அப்படியே அவர் அணிந்து சென்றிருந்த உள் பனியனைக் காட்டிக் கொண்டிருந்தது.

பையில் போட்டுக் கொண்டதும் நிதானமாக நடந்த வந்ததும் ஆபத்தைத் தரவில்லை. நைலான் ஆடைக்குள்ளிருக்கும் பொருள் பளிச்சென்று தெரியுமே என்று சிந்திக்காமல் விட்டது மட்டும்தானே அடிவயிற்றிலேயே அடித்துப் போட்டது? 'அடச் சீ! உலகமகா மடையன் நான்.' அலுத்துக் கொண்டார் திருவாளர் ஆதிநேர்மை. காலங் கடந்த ஞானம் கைகொட்டிச் சிரித்தது.

இது இலங்கையில் கொழும்பில் நடந்த ஓர் உண்மைக் கதை.

புதுமுக எழுத்தாளர்களின் அனுபவம் பக்குவப்படுமுன் பெரிய முடிவெடுத்து விடக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நகைச்சுவைச் சம்பவத்தைக் கூறினேன். இதை வைத்துப் பெரிய எழுத்தாளர்கள் என்பவர்களை மற்ற கடைவட்டங்களுக்குள் கலந்துவிடாதீர்கள். பாவம்.

தத்தனது பாட்டுக்கு வாழ்பவனின் சிந்தனையும் ஓர் எழுத்தாளனின் சிந்தனையும் ஒன்றன்று. முன்னையது தன்னகர்வுக்கான தனிப்பட்ட சிந்தனை. மற்றது பொது நோக்கிற்கான தனித்துவமான சிந்தனை.

இந்த இரண்டாவது ரக சிந்தனையை வளர்க்கும் விதமும் அதை அமைக்கும் விதமும் அதை அளிக்கும் விதமும் ஒருவித கலையையொப்ப காரியமாக இருப்பதுதான் எழுத்தாளுமையின் அடிப்படையாகும்.

எழுதுதல் வேறு. எழுத்தால் ஈர்த்தல் வேறு. புலம்பெயர் வாழ்வின் எழுத்துலகச் சூழலில் ஆழமாக வேர்விட்ட மரங்களுடன் ஆங்காங்கே மழைக்கு வளர்ந்த காளான்களும் சமத்துவம் பாட விழைவதும் சமத்துவமாக நின்று கொள்ள முயலுவதும் நமக்கெல்லாமே நன்கு தெரிந்த விடயந்தான் என்றாலும் சற்று விரிவாக இது பற்றி நாம் கலந்து கொள்வது தவறல்ல என்று நினைப்பதே இதை எழுதுவதன் நோக்கமாகும்.

சில தந்திரமான தகுதியில்லாத எழுத்தாள பதவி முன்னோக்கிகள் கடைப்பிடிக்கிற ஒரு நரி விளையாட்டை அவதானித்திருக்கிறீர்களா?

முதலில் அப்பாவிகளாக வந்து ஒரு வளர்ந்த எழுத்தாளரை அணுகுவார்கள். மெதுவாகப் பேச்சுக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பிசின் கலந்தவர்களாக ஒட்டிக் கொள்வார்கள்.

முதலில் புத்தி கேட்பவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். பிறகு படிப்படியாகப் புத்தி சொல்லுமளவிற்கு தடிப்படைவார்கள். அறிவிலல்ல, அதிகப் பிரசங்கித் தனத்தில். இதை வாசிக்கின்ற சில தரமாக வளர்ந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர்க்கு இந்த அனுபவம் இருக்கவும் கூடும்.

செய்தியைத் தருவது என்ற விதத்திலே மரண நோட்டீசும் ஒரு பத்திரிகைதான். திருமண அழைப்பிதழும்கூட பத்திரிகைதான். அதாவது ஒரு செய்தியைச் சுமக்கின்ற ஏடுகள்தாமவை.

ஆனால் பத்திரிகை அல்லது சஞ்சிகை என்று தனித்துவமாக அங்கீகாரத்துடன் வெளி வரும் பத்திரிகைக்கும் அறிவிப்பு விடும் அவற்றிற்குமிடையில் பாரிய வித்தியாசங்களுண்டு.

முன்னதற்கு தகுதி வரைமுறை அத்தியாவசியமல்ல. ஆனால் பின்னதற்கு என சில தனிப்பட்ட தகைமைகள் இருக்க வேண்டும். வெறும் எழுத்துப் பிழை பார்க்கும் ஆசிரியர் முதலிரண்டு பத்திரிகைகளுக்கும் சரி. ஆனால் அதற்கு மேலும் சில தகுதிகள் இந்த மூன்றாவது பத்திரிகையின் ஆசிரியருக்கு வேண்டும்.

தடி எடுத்தவனெல்லாம் காவலனென்றால் கள்ளனும் அதற்குள் வந்து விடுவது சாத்தியமென்பது தெரிந்திருக்க வேண்டும்.

சில மனிதர்கள் சில நோக்கங்களுக்காகச் சில வேலைகளைச் செய்வார்கள். வெளியில் பார்க்க ஏதோ பொதுத் தொண்டு போலத் தெரியும். சரியாக அவதானித்துப் பார்த்தால் அது ஒரு முகமூடி என்றும் பின்முகத்தில் சுயநலம் என்ற உணர்வும் முன்னேற ஏற்ற வழியாக ஏமாற்றுத்தனத்தை ஏற்றவிதமாக ஊருக்கேற்ப மாற்றி நடத்தும் கயமை என்றும் புரியும்.

எழுதும் ஆர்வம் வந்துவிட்டால் அதை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து எழுதி எழுதி வர வேண்டும். அப்போது நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். அதாவது நம்மையுமறியாமலே நாம் எழுதுவதிலுள்ள கருத்துக்கள் பற்றிய ஒரு தனிப்பட்ட விமர்சனம் நமக்குள் எழும். இந்த இடத்தில் நாம் தெளிவாக இருந்தால் பயமகன்று தனித்துவமாக எழுதும் ஆற்றல் பிறந்துவிடும் வழி பிறந்துவிடும் என்பதுதான் எனது அனுபவ நம்பிக்கை.

தொற்றி நின்று பெயரெடுக்கப் பற்றி நின்று கதை விடுவதை விடவும் தட்டி நின்று சத்தியத்தைச் சார்ந்து எழுதல் பலனளிக்கும்.

வேடிக்கையான சில மனிதர்களைக் கவனியுங்கள். அவர்களின் எழுத்துக்களில் எதையுமே கண்டு பிடிக்க முடியாதபடிக்கு நோக்கத்தில் வெறுமை மிதப்பது தெரியும். ஆனால் அது ஒரு படைப்பாக வெளிவந்திருக்கும். வெளியிட்டவர் ஓர் பத்திரிகை ஆசிரியரா? என்ன அடிப்படையில் அதை அவர் வெளியிட்டார்? பதில் : நாமறியோம் பராபரமே!

புகலிட எழுத்துலகில் புத்தம்புது மலர்களைத் தான் இலக்கிய உலகம் எதிர்பார்க்கின்றது. புதுப்புதுக் களைகளையா அல்லது காளான்களையா எதிர்பார்க்கின்றது? அதை உணராமல் எதையெதையோ எழுதிவிட்டு எழுத்தாள உரிமை பாடின் எப்படி அங்கீகாரம் கிடைக்க முடியும்?

புத்தம் புது எழுத்தாளராக ஒருவர் அறிமுகமானாலும் தரமான ஆக்கத்திற்கு அவர் படைப்பு உத்தரவாதம் அளிக்குமேல் பல முன்னணி படைப்பாளர்களையும் கூட அவர் விஞ்சி விடுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

தரமும் தகுதியும் பலத்தையும் சிபாரிசுக்களையும் புறந்தள்ளி நிமிர்ந்து நிற்பதை எழுத்துலகத்தின் எடுபிடிகளால் தடுத்துவிடவும் முடியாது. அந்தளவுக்கு புதிய அறிமுக எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை வழிப்படுத்தித் தரப்படுத்துவதில் ஈடுபடுத்தினால்தான் புலம்பெயர் படைப்புலகம் மிகவும் ஒளிமயமான ஒரு இடத்தைப் பெற்றுத் திகழும். நடக்க வேண்டிய புதுமை நடந்து தீருவதாக இருக்கும்.

பத்தோடு பதினொன்றுக்கும் பத்தில் ஒன்றுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில் பத்தோடு பதினொன்றுகளே பரந்து இருக்கின்றன.

எதையும் எழுத நினைக்கு முன் எதற்காக எழுதலாம் என்றும் எப்படி எழுதினால் அதனால் நல்ல பயன் அதை வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். பல சமயங்களில் இப்படி யோசிக்கையில் ஒன்றுமே தோன்றாது விடவும் கூடும். அதனர்த்தம் சிந்தனை பலவீனமல்ல. சிந்தனையைப் புடம் போடல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது சிறிது தாமதமாக எழுதினாலும் ஆழமான ஒரு படைப்புக்கான அத்திவாரம் நமக்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும் வாய்ப்பு உண்டு. பக்கம் நிரப்பும் பத்திரிகைகளல்ல, தரத்தைப் பரப்பும் பத்திரிகைகளே மக்களுக்கு அவசியமான சிந்தனை மருந்துகள்.

தரமறிந்து படிப்பது தரமறிந்த பழகுவதைப் போன்ற ஒரு சிறந்த பயிற்சியாகும்.

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும். இதை எழுத்துலக நுழைவுக்கு முயலும் ஆர்வலர்கள் உணர்ந்து எழுத வேண்டும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றான் ஒரு சிறு வட்ட வாசி.

ஆவதும் எழுத்தாலே அழிவதும் எழுத்தாலே என்பான் எழுததுலக வாசி.

எழுத்தாலே எது ஆகும்? எது அழியும்? சிந்தித்தால் ஒரு பலனுள்ள ஆக்கத்தை நீங்கள் படைத்துவிடலாமே! முயற்சித்தாலென்ன?

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ -தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ!

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா –அது
திரும்பவும் வராமே பாத்துக்கோ!

எழுதாதே..பிழையாய்..எழுதாதே!

(ஜேர்மனி, மண் சஞ்சிகை 2004 கார்த்திகை - மார்கழி இதழில் வெளிவந்தது.)
(தமிழமுதம், 22.11.2004)
posted by Unknown @ 6:59 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்