எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
உள்ளம் உயர உணரல் வேண்டும்
Freitag, Juli 11, 2008
வாழ்க்கை அனுபவங்களில் நமது பெரும் பகுதி காற்றோடு கலந்து போவதும், சில பகுதிகள் அவ்வப்போது வந்து வந்து அலைமோதுவதும், மிகச் சில மட்டும் அவை நடுவே நிலையான பாறைகளாக அழுந்தி, நிலைத்து நிற்பதும் விந்தையுடன் சுகத்தையும் துயரத்தையும் கலந்து தருகின்ற சுவையான சுகானுபவத்தையும் கடினமான துயரனுபவத்தையும் காலதேவன் நினைவுசூட்டி நம்மை அசைக்கின்ற போது எழுகின்ற உணர்ச்சிகளின் தாக்கங்கள் இருக்கின்றனவே, அவற்றுக்கிடையிலேதான் நான் இறைவனின் இயக்கத்தின் விந்தையை உணர்கின்றேன்.

சும்மா உண்டு இல்லை என வாதாடும் காட்சிப் பொருளாக அந்த சக்தியைப் நமது 'புரியாநிலை உணர்வோடு' அணுகும் வரைக்கும் இருளுக்குள் ஒன்றுமில்லையென வாதிடும் அறிவீனமே நம்மில் இருந்து வரும் என்றே எனக்குப்படுகின்றது.

இதை நான் ஒரு மதவாதியாகவோ மதப் பிரச்சாரகனாகவோ மத நம்பிக்கைகளுக்குப் பந்தம் பிடிப்பவனாகவோ எழுதவில்லை. எனக்கு அவைகளில் நம்பிக்கையுமில்லை. எனது சிறிய வாழ்க்கையின் அனுபவங்களில் பட்ட, படுகின்ற தெளிவுகளினாலே உணர்ந்தே சொல்லுகிறேன்.

நாம் நம்மை அறியாத விதங்களிலே நம் சக்திக்கப்பால் நமக்குள்ளும் நமக்கு வெளியிலும் இயங்குகின்ற ஆற்றல்மிக்க ஒரு சக்தியினால் இயங்க வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்ற உண்மையை ஆளுருவமாகவோ பொருளுருவமாகவோ கற்பிதம் பண்ணிக் கொண்டு வாதிட்டுக் கால விரயம் செய்வதை விடவும் அதனை உணர்ந்து ஏற்ப வாழ்வதே சிறப்பாகும் என நினைக்கிறேன்.

எனது ஒரு சின்ன அனுபவம் இது.

எனது தாய் நல்ல சுகதேகியாகவிருந்தவர், ஒரு நாள் திடீரென சுகவீனமடைந்தார்.

அது நடப்பதற்குச் சரியாக ஒரு வாரம் முன்பு புத்தாண்டுத் தினம். அதன் பிறப்புக்கு முன்தினம் டிசம்பர் 31ம் நாள் ஆலயத்துக்குப் பூசை வழிபாட்டுக்கு எங்கள் முழுக்குடும்பமும் சென்றிருந்தது.

பொதுவாகக் கிறிஸ்மஸ், அதைத் தொடரும் புதுவருடப் பிறப்பு இரண்டுக்கும் அந்நாட்களில் சாமப் பூசைக்குப் போய்விட்டு வந்துஇ அந்த நள்ளிரவில் வீட்டில் இறைவனுக்கு நன்றி சொல்லி செபிபபதும் பிறகு ஒரு சிறிய சிற்றுண்டி விருந்துடன் சிறிது நேரம் வெடி பற்றவைத்து மகிழ்வதும் பல குடும்பங்களிலும் இருந்து வந்த பழக்கம். இப்போது எப்படியோ தெரியவில்லை. அநேகமாக அப்பழக்கம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என நம்புகின்றேன்.

அன்று சாமப் பூசை முடிந்து வந்து வீட்டுக்குள் நுழைகையில் அம்மா சற்று கலங்கிய குரலில் அப்பாவிடம் சொன்னார்:

'எனது வலது கால் கொலுசைக் காணவில்லை. அது கழன்று எங்கோ விழுந்து விட்டது போல் தெரிகின்றது.'

அப்பா முதலில் சற்று அதிர்ந்தாலும் அதை அலட்சியப்படுத்தினார். 'நீ கவனிக்காமல் வந்திருப்பாய். பரவாயில்லை. மற்றதையும் கழற்றி வை. அடுத்த வாரம் புதிது வாங்கலாம்.'

அம்மா மௌனித்தாலும் அவரது கண் கலங்கி நீர் வழிந்தது. நான் அருகிலே ஓடி ஆறுதல் சொன்னேன்.

'போனால் போகட்டும் அம்மா. நீங்கள் வேண்டுமென்றா தொலைத்தீர்கள்? அப்பாகூட கோபமே படவில்லையே! சும்மா விடுங்கள்.'

அம்மா மெல்லிய குரலில் சொன்னார்கள்.

'இல்லை ஐயா. எனக்கென்னவோ இது ஏதோ ஒரு துர்க்குறியாகப் படுகிறது. எனக்குள் மிகவும் அச்சமாக இருக்கிறது. அதுதான்..'

நான் பலமாகச் சிரித்தேன்.

'சும்மா இருங்களம்மா. ஒரு வெள்ளிக் கொலுசும் உங்கள் துர்க்குறியும். இதெல்லாம் வெறும் மூடக் கொள்கைகள். இப்படிப் பயந்தால் தொலைகிற ஒவ்வொன்றுக்குமே காரணம் சொல்லிக் கொண்டு நடுங்க வேண்டியதுதான். சும்மா சிரித்துக் கொண்டு மறந்து விடுங்கள்.'

எனது வாதம் சரிதான். ஆனால் அம்மா சொன்னார்கள்.

'மகனே, சில சம்பவங்கள் நடக்கவிருப்பதை முன்கூட்டித் தெரிவிப்பதும் இயற்கையில் உண்டென்பதால்தான் யோசிக்கிறேன். சம்பவங்களுக்குக் காரணமுண்டு என்பதும் உண்மைதானே என்பதால்தான் அஞ்சுகிறேன்.'

அந்த வயதில் அது எனக்குச் சரியாகப்படவில்லை. ஏதோ மூடநம்பிக்கைதான் அது என நினைத்தேன். எனவே நான் உரக்கச் சிரித்தேன். அதைக் கேட்ட மற்ற அனைவரும் என்னை அம்மாவை மதிக்காமல் சிரித்ததற்காகக் கடிந்ததோடே அவர்களின் கவலையைப் பகிர்ந்தவாறு அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்த, அப்படியே சற்று துயரகரமாக எங்களது அந்தப் புது வருடப் பிறப்பு துவங்கியது.

அந்த ஆண்டு ஒரு லீப் ஆண்டு. அதாவது பெப்ரவரி மாதம் 29 தினங்களில் நிறைவுறும் ஆண்டு. அந்த ஆண்டு தைப்பொங்கல் தை 15ல் வரும்.

இப்போது கதை தொடங்கிய இடத்துக்குப் போகிறேன்.

தை 6ம் தேதி காலை என் அம்மாவுக்குத் திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுத் துவண்டார்கள். சுகமாக, சும்மா இருந்த அவருக்கு அதன் கடுமையைத் தாங்கிக் கொள்வதில் பெருஞ் சிரமமிருந்ததை அவர்களின் துடிப்பு உணர்த்தியது.

முதலில் குடும்ப வைத்தியரிடமும் பிறகு சில 'ஸ்பெஷலிஸ்ட்டுகளிடமும்' ஓடி ஒடி முயன்றும் பயனளிக்காமல் போகவே ஒரு பிரபல வைத்தியமனையில் அனுமதித்தோம்.

அந்நாட்களில் டாக்டர் அந்தனீஸ் என்ற ஒரு பேர் போன அறுவை சிகிச்சை நிபுணர் கொழும்பில் இருந்தார். அவர் அம்மாவைப் பரிசோதித்துவிட்டு, வயிற்றில் ஏதோ வளர்ந்து இருப்பதாகவும் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தினார். ஆசியாவின் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் அவர். ஆகவே அவரை நம்பி அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தோம்.

எவ்வளவு மனப் பயம் இருந்தாலும் வேறு மாற்று வழிக்கு எதுவுமே எங்களுக்கு அப்போது தெரியவில்லை. முழுக்க முழுக்க பதற்றம் மட்டுமே எங்களனைவரையும் சுற்றிச் சுற்றி வளையமிட்டுக் கொண்டிருந்தது எனலாம்.

அவரது தலைமையில் அனைத்தும் வெற்றிகரமாக நடந்தது. அவரது விசேட கவனிப்புடன் மருத்துவ மனையில் அம்மா இருந்தார்கள். ஆனால்...

12ம் தேதி அனுமதிக்கபபட்ட அம்மா சரியாக 15ந் திகதி பொங்கலன்று காலை 7.30 மணியளவில் இறைபதம் அடைந்தார்.

இந்த ஆண்டு வந்திருக்கும் இந்த வித 'லீப்' ஆண்டில் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் வாழ்த்து எழுதியனுப்பி விட்டும் தொலைபேசியில் வாழ்த்திவிட்டும் எனக்குள் துயரத்தை அடக்கிக் கொண்டு, 'தன்னந்தனியனாக' எனது இதயத்துள் அழுது கொண்டிருந்தேன் நான். ஏன் தாயை இழந்த பாரம் அன்றைய துயரத்தை என்னுள் இருத்தியதைத் தாங்குவது கடினமாக இருந்ததால் அடிக்கடி நான் ஒரு பாடலைப் பாடிப்பாடி ஆற முற்பட்டேன்.

மிகச் சிரமமாக இருந்தது அந்த அனுபவம்.

எனவே எனது அயலக வாழ்வின் தனிமையின் துக்கத்தையும் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள நான் கடைப்பிடிக்கும் ஒரு பயனும் பக்குவமும் சுகமுமான இந்த எழுத்துப் பழக்கத்தைப் பயன்படுத்தி ஆறுதல் விழைந்து 'அந்த இருதுளி விழிநீர்' என்ற சிறு கதையாக அந்நேர அனுபவத்தை வடிக்க முனைந்தேன். துவக்குவது எளிது தொடர்வது எளிதன்று என்று தெரிகிறது. இருந்தாலும் முயன்று கொண்டிருக்கிறேன். அப்படியாவது சிறிது ஆறுதல் கிடைக்காதா என்கின்ற நப்பாசைதான். பார்ப்போம்!

இங்கே ஒன்றைக் கவனித்தீர்களா? என் தாயாரின் கால் கொலுசு தொலைந்ததும் அவர்கள் கூறிய காலத்தின் கதை இதற்குள் ஒத்துப் போகின்றது தெரிகின்றதே! இதை சும்மா மூடத்தனமென்றோ சந்தர்ப்பவசம் என்றோ ஒதுக்குவதா அல்லது இதற்குள் ஏதோ இருக்கலாம்தான் என்று கொள்வதா? நீங்களே சொல்லுங்கள்.

நாம் என்னஇ எப்படி நினைத்தாலும் பல மூட நினைவுகளுக்கிடையிலே சில புரிந்து கொள்ளக் கடினமான உண்மைகளும் புதையுண்டுதானுள்ளன என்பதே என்னைப் பொறுத்தவரை உண்மையாகத் தெரிகின்றது.

இளம் வயதின் அனுபவமின்மை காரணமாக எதனையும் எதிர்த்து வாதாடி நிற்பது இயல்பு. சில அறிவியல் சார் விடயங்களில் அதுவே முக்கியமும்கூட.

ஆனால் வயதும் வாழ்க்கையும் வழங்கும் அனுபவங்களைச் சரியாகப் புகுத்திச் சிந்தித்து உணரக் கால அவகாசம் வேண்டும். அதுவரைக்கும் துள்ளலும் துடிப்பும் அதனை உணர்வதில் கடினமும் இருக்கத்தான் செய்யும்.

கண்களை மூடிக்கொண்டு நம்புகின்றமைதான் மூடத்தனம். அதைத்தான் பாமர மக்கள் செய்கிறார்கள். அதை விளக்கித் திருத்தாமல் பல மதவாதிகள் அவர்களைப் பயன்படுத்தித் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகக் கட்டுக்கதைகளை உண்மைகள் என்று நம்பும்படியாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள். இதனால்தான் மூடக்கொள்கைகள் பக்த வேடங்களாகிச் சமுதாயங்களைச சீரழித்துக் கொண்டு இருக்கின்றன.

அவர்கள் செய்கின்ற அந்த சமுதாயத்துக்கு எதிரான மாபாதகத்தை எதிர்த்துத் தகர்க்க நிற்கும் நியாயத்தையும் சரியான இயற்கையோடொன்றிய உண்மைகளையும் ஒனறாக இணைத்து மூடக் கொள்கையெனத் தலைப்பிடுவது சரியென நினைப்பதில்தான் தவறிருக்கின்றது என்பதே என் கருத்து.

சிலரிடம் திகழும் அசாதாரண சக்தியை மறுப்பதே கடினம். அதன் காரணத்தைக் கண்டு சொல்வதால் அதைப் பொய்யாக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

உதாரணமாக, சிலர் தங்களின் மரண தினத்தை அல்லது நேரத்தை அறிந்து, உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலர் சாகத்தான் போகின்றோம் என்று இருப்பார்கள். உதாரணமாக மரண தண்டனைக்குள்ளாகிக் கழுமரமேற ஆயத்தமாகிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் கடைசி விநாடிகளில் அது பொய்த்துப் போய் விடும். அவர்கள் மன்னிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆகஇ எதுவோ எப்படியோ எதற்காகவோ என்று நமது வாழ்க்கை திட்டமிடப் பட்டுஇ அதன்படி நடத்தப்பட்டு வருகின்றது என்றே தெரிகின்றது.

இதை உதாரணக் கதைகள் சொல்லி விளக்குவது கடினத்திலும் கடினம். காரணம், கேட்பவர்கள் அதை எந்தளவுக்கு நம்புவார்கள் என்பதில் பிரச்சினையுண்டு.

ஆனால் உங்கள் சொந்த வாழ்வின் அனைத்து முக்கிய சம்பவங்களையும் நீங்களே சரியாகப் பட்டியலிட்டு, வகைப்படுத்தி, அளந்து, அறிந்து, அவதானித்துப் பார்த்தால் நிச்சயமாக இதை உஙகளால் உணர முடியும் என நான் நம்புகின்றேன்.

அதாவது இறைவனை நம்புவது சொர்க்கத்துக்குள் நுழைவதற்கல்ல. அவனை நம்மில் நாமே உணர்ந்து நடப்பதற்குத்தான். சொர்க்கமும் நரகமும் உள்ளுக்குள்தான் உள்ளன என்றே நான் நம்புகின்றேன்.

உடம்பில் சுட்டால்தான் தீ சுட்டு வலிக்கும். உடலே இல்லாமல் சுடுமென்றால்? இதெல்லாம் சும்மா 'கப்சா'க்கள்தான்.

நாம் என்பது நாமே அல்ல. தலை என்றால் நம் எல்லாரின் தலைகளும் தலைதான். ஆனால் அவைகளில் ஒன்றுமே ஒன்றாக ஒரே வித உருவில் இல்லையே! ஆனாலும் அனைத்தும் ஒன்றாகத்தானே இருக்கின்றன? இதிலிருந்து என்ன தெரிகின்றது எதுவும் ஒன்றல்ல போலிருந்தாலும் ஒன்றுதான் என்பதுதானே!

உயிரிருக்கும் வரை எனது கை, எனது கால், எனது உடம்பு. இறந்த பின்? எனது பிணம். அப்படியென்றால் நான்? நான் எங்கே? எனக்குப் பின் நான் யார்?

மிகக் கடினமான இக்கேள்விக்கு விடைதான் நாம் என்பது. ஆம். அனைத்து நானுமே முடிவில் நாம் என்ற ஒன்றாகவே இருக்கும் அதுதான் இறைவனின் சக்தியாக, இயக்கமாக, உயிராக, ஆன்மாவாக இருக்கும்.

இப்படி உணர்வது அனுபவம் தரும் உணர்வென்றால், அது சரியென்றால் காலம் கனியாமல் காரியம் நடக்காது என்பதும் நேரம் வராமல் வாழ்க்கை நிற்காது என்பதும் புரியும்.

நாம் நடப்பது உடலின் இயக்கத்தினால், அது இயங்குவது உயிரின் சக்தியினால். அதன் இயக்கத்தை நெறிப்படுத்தும் நிரந்தர சக்தி நம்மிடமில்லை. காரணம், அதை இயக்குவது நாமல்ல என்பது புரியும்.

புரிந்தால்... சரியாகப் புரிந்தால்...

நல்லதுதானே!
posted by Unknown @ 11:14 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்