எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
நடக்கவில்லை நாம்: நடத்தப்படுகிறோம்!
Mittwoch, Juli 16, 2008
மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்,
அது நமது இதயத்துக்கு சரியையும் பிழையையும் வலியுறுத்துவது உண்மை என்றிருந்தால், நீதியென்றும் நியாயமென்றும் நம் மனதுக்கு தீர்ப்பிடும் எண்ணம் எழுவதற்கு ஓர் அடிப்படை இருக்க முடியும் என்றால்,
அது வெறுமனே சாதாரணமாக எழுந்தவிடக் கூடிய எதுவோவல்லவென்றும் எதனாலோ தூண்டிவிடப்பட்டே எழுகின்றது என்றும் கொண்டால்,
நாம் நடக்கவில்லை என்றும் நடத்தப்படுகின்றோம் என்னும் ஓர் உள்ளுணர்வு நமக்குள் எழுவதை நாம் உணரல் கூடும்.

இந்த உணர்வுதான் கடவுள் என்ற நம்பிக்கையின் பால் நம்மையும் நமது உள்ளத்தையும் அடிக்கடி அதுவும் மிக அடிக்கடி நகர்த்திக் கொண்டு வருகின்றது என்று நமது உளமார உணர முடிகின்றபோதுதான்…

இறை நம்பிக்கையில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்று வாதிடுவதைவிடவும் இருப்பதாக நினைத்து வாழ்வதில் இருக்கின்ற அமைதியை ஓர் அருமையான அனுபவமாக அனுபவிக்க முடிகின்றது. அப்போதுதான்… நமது சக்திக்கு மிஞ்சிய ஒன்று நம்மை வழிநடத்திச் செல்வதை நம்மாலே அறிந்துணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஆண்டவன் பெயரால் நடக்கின்ற தகிடுதத்தங்களை முழுமூச்சுடன் வெறுத்தாலும் ஆண்டவனை அதற்காக வெறுப்பதில் நியாயமில்லை. விபத்தினால் ஆபத்துண்டு என்று பயந்து மின்சாரத்தையே தடுத்துவிட்டால் அதனால் நட்டம் யாருக்கு?

ஆண்டவனை இல்லை என்று மறுப்பவர்கள் அவனைப் பற்றிய அதாவது அந்த சக்தியைப் பற்றிய சாதக சிந்தனையோடும் சிந்தித்துப் பார்க்க தயவுசெய்து முன்வர வேண்டும். அது நல்ல பலன் தரவல்லது என்று நான் நம்புகின்றேன்.

பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசமிருக்கின்றதல்லவா!

அடுத்து அடுத்து வந்து நிறைந்த கடுமைமிகு துயரங்களால் அழுத்தப்பட்டபோதெல்லாம் இந்த ஆண்டவன் பாலான நம்பிக்கை உணர்வுதான், அது ஒன்றுதான் எனக்கு தைரியத்தையும் ஆறுதலையும் பல சந்தர்ப்பங்களில் மருந்தென அளித்து வந்திருக்கின்றதாக நான் அனுபவப்பட்டிருக்கின்றேன்.

அதற்காக நான் கோவில் குளம் என்று நேர்த்தி வைத்துக் கொண்டலைந்ததில்லை. அதிலெல்லாம் நம்பிக்கை வைத்து அவ்வாறு செய்தால்தான் இறைவன் உதவிவிடுவான் என்று நம்பும் போதுதான் நாமே நம்மை வர்த்தக ரீதியாக அவனை அணுக வைத்துக் கொள்கிறோம் என்றும் அவனை நம்புதற்கு அவனுக்குக் கப்பம் கொடுக்கத் தேவையில்லை என்றும் என் மனம் உரைத்ததை ஏற்று நடந்திருக்கிறேன். இப்போதும் அப்படித்தான்.

ஆலயம் செல்ல வேண்டிய அவசியத்தை இதை வைத்து நான் மறுப்பதாகக் கருதக்கூடாது. ஆலயம் செல்லும் வழக்கம் நம் மனதை மிகவும் பக்குவமாக வைத்துக் கொள்ள உதவி செய்ய வல்லது. ஆனால் அடிப்படை தெரியாமல் எதையோ பெற்று விடலாம் என்றும் எதையோ செய்வித்துவிடலாம் என்றும் உலகாதாய கண்ணோட்டத்தோடு தொழில் ரீதியாக சிந்தனைசெய்து கொண்டு எதிர்பார்ப்புடன் மட்டுமே செல்வது நமது மனத்தூய்மையின்மையின் வெளிப்பாடே என்றும் தூய விசுவாசமில்லாமல் பக்தி ஈடேறாது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் படைப்புக்களின் விதத்தைத் தான் ஆய்ந்து சொல்ல முடியுமே தவிர அடிப்படையை அதனால் இறுதி உறுதி செய்ய முடியாது. காரணம், அது அறிந்ததை விடவும் அறியாதவையும் அறிய வேண்டியவையும் அகிலத்துக்கும் அப்பால் அகண்டு விரிந்து, பரந்து கிடக்கின்றன.

அனைத்திற்கும் ஓர் உட்தொடர்பு உண்டு என்பதும் அதுவே எல்லாமாக எங்கும் இருக்கின்றது என்பதும்தான் கடவுள் நம்பிக்கையின் அத்திவாரமே! அல்லவா!

இன்றைய அறிவியலில் கண்டுபிடிக்கப்படுபவை காரணங்கள் மட்டுமே என்பதால்தான் அவற்றை வைத்துப் புதுப்புது கண்டுபிடிப்புக்களை அது அறிமுகப்படுத்தி வருகின்றது.

படைப்போடு போட்டி போட முனைகின்ற அறிவியலானது தானாகவும் தனதாகவும் சுயமாகப் படைப்பதென்பதைச் செய்வதற்கு எந்த அடிப்படையுமே சுயமாக இல்லாமல் தவிப்பது கவனித்தற்பாலது.

மனிதனையே படைத்துவிட முயலும் விபரீதமான முடிவெடுப்பில் விஞ்ஞானம் இப்போது நுழையத் தொடங்கியிருக்கிறது. இயற்கையைத் தனது திட்டத்திற்கேற்ப திரித்து அமைக்க முயலுகின்றது.

இதன் முடிவு தவிர்க்கவே முடியாத ஆபத்திலும் சட்டவிரோதக் குரூரங்களின் ஆபத்தான விபரீதமான அத்திவாரத்திலும்தான் உலகத்தை இருத்தி வைக்கப் போகின்றது. இந்த விதைப்பின் அறுவடையே உலகத்தின் இறுதி அழிவை நிச்சயித்தாலும் கூட வியப்பில்லை.

நான் எனது வாழ்க்கையில் கண்டதில் வெறும் பேச்சுக்களில் நம்பியதை விடவும் அனுபவித்ததில்தான் அதாவது சொந்தமாக அனுபவப்பட்டதில் இருந்துதான் தெய்வ நம்பிக்கையில் உறுதி பெற்றேன் என்பதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமே கிடையாது.

ஆனால் அந்த நம்பிக்கையை வெறுமனே மதவட்டத்துக்குள் மட்டுமே புகுத்தி வைத்து அதற்குப் பிரச்சாரம் தேடும் பிழையை மட்டும் முற்றிலுமாக நான் தவிர்த்திருக்கிறேன். காரணம், மதம் வேறு இறைபக்தி என்பது வேறு.

மதம் பக்திக்கு உதவலாம். உதவாமலும் போகலாம். பக்தி சரியெனில் உதவியே தீரும்.

கடவுள் இல்லை என்று வாதிடும் பகுத்தறிவுக் கொள்கையின் பின்னணியில்...

மதங்களின் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான அறிவுக்குதவாத மூடநம்பிக்கைகளின் மேலான ஆத்திரமும்,

மக்களை அவற்றின் அடிப்படையிலே மட்டுமே சிந்திக்க வைப்பதன் மூலம் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்த முயலும் பிழையான அணுகு முறைக்கு எதிராக எழுகின்ற கோபமும்,

சமுதாயத்தைச் சுதந்திரமாக சிந்தித்து நடக்கவிடாமல் திட்டமிட்டவிதத்தில் விஷமிகளின் பிழையான முறை கெட்ட வழிகாட்டல்களினால் மக்கள் வெறும் பெட்டிப் பாம்புகளாக பணிந்து கிடக்கும்படி அடக்கியொடுக்கப்படுவதன் கொடுமையைப் பொறுத்துக் கொள்ளமுடியாத நியாயமான தர்மம் சார்ந்த ஆத்திரமும்இ

படிப்பறிவே இல்லாதவனும்கூடஇ எல்லாம் தெரிந்தவனாக வேடம் போடவும் மக்களை ஏய்க்கவும் இந்த இறை நம்பிக்கை துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் எழும் வெறுப்புணர்வும்இ

அரசியலும் நாடுகளும் அநியாயமாக மதங்களின் பெயரால் நிம்மதிக் குறைவுகளுக்கு உட்பட்டு இருப்பதனை அவதானித்துஇ அதனால் எழும் நியாயமான கோபமும்இ

மக்களின் சிந்தனைப் பலவீனத்தினால் எழக்கூடிய எதிர்காலம் பற்றிய அக்கறையுமே அவர்களை எல்லா அநீதிகளுக்கும் அடிப்படையாக இந்த நம்பிக்கையே இருப்பதாக எண்ண வைக்கின்றது. இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

“கடவுளை மற ; மனிதனை நினை” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகள் வெறும் நாத்திகமான, குதர்க்கமான வார்த்தைகள் அல்ல. அவை சத்தியத்தின் சுத்தமான வெளிப்பாடுகள்.

“கடவுளே, கடவுளே!” என்று ஓடுகின்றவன் “தனக்குஇ தனக்கு” என்ற சுயநலத்தோடேதான் ஓடுகிறான். அதுவே அவனைக் கடவுளை விட்டுத் துரத்தும் நடவடிக்கையும் கூட.

ஆனால் எதுவித கைம்மாறும் கருதாமல், மனிதாபிமானத்தை நினைத்து வாழ்ந்தால் அதுதான் சரியான வழிபாடும் செபமும் மந்திரமும் ஆகும்.

ஏசுக்கிறிஸ்து சொன்னார்: “பிதாவே! பிதாவே என்று உரக்கக் கத்தி செபிப்பவர்கள் என் தந்தையின் இராட்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. அவரது சித்தத்தை நிறைவேற்றுபவர்களே பிரவேசிப்பார்கள்”

இதற்கும் தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கும் அடிப்படையில் கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லையே! அவர் கடவுளே! கடவுளே! என்று கத்திக் கொண்டு தமது கடமையை அலட்சியப்படுத்தும் மனிதர்களைச் சாடுவதில் எந்தத் தவறுமே இல்லையே!

ஆண்டவனே! ஆண்டவனே! என்று சொல்லி மட்டும் காட்டுபவனை நீதிமான் என நம்பும் மூடத்தனத்துக்கு பதிலாகத்தான் தற்போதைய ஆத்திக ஆதிக்க மண்டலங்களின் வண்டவாளங்கள் பல இடங்களிலும் தண்டவாளம் ஏறிக் கொண்டிருக்கின்றனவே!

இத்தகைய நல்ல வார்த்தைகளை ஒரு நாத்திகவாதி சொல்லிவிட்டார். அதனால் அதைக் கேட்காதே என்று சொல்பவன் பச்சை சுயநலவாதியாக மட்டுமே இருப்பான்; இருக்க முடியும். அல்லவா?

நானறிந்த எத்தனையோ தங்கமான மனிதர்கள் உலகின் கண்ணுக்கு நாத்திகர்கள் என்றாலும் நான் கண்ட பல பக்தர்களில் பெரும்பான்மையானோர் பொய் முகத்தினராகவே இருந்திருக்கின்றார்கள்.

உண்மையான பக்தர்களையும் நான் கண்டிருக்கிறேன். மனதார மற்றவர்களுக்குத் தீங்கே நினைக்காத நல்ல நாத்திக இதயங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

அதே சமயம் மனதார தீமையை மட்டுமே நினைப்பவர்களாகவும் மேலுக்கு பக்திப் பூச்சு என்ற வண்ணத்தைப் பூசிக் கொண்டு, இறைவன் பெயரில் ஏமாற்றித் திரிபவர்களாகவும் அலையும் நடமாடும் பசாசுகளையும் பலரை நான் நேரிலேயே கண்டு, பழகி அனுபவப்பட்டிருக்கிறேன். அங்கும்தான். இங்கும்தான்.

இக்கட்டுரையை அவர்களில் சிலர் வாசிக்க நேரலாம். அப்போது அவர்கள் என்னைத் திட்டவும் கூடும;. ஆனால் அதற்காக நான் உண்மையை விட்டு அகல்வது சரியாகாதே!

உண்மையாக நான் இறைவனின் உதவியைக் கேட்டு நின்றதுண்டு. தன்னந்தனியனாக மனதால் அழுததும் உண்டு. என் மனதார நான் கேட்ட காரியங்கள் நடந்ததாக உணர்ந்தபோது, அவற்றை இறைவனின் சித்தப்படி எனக்கு நடப்பதாகவே நான் எடுத்துக் கொண்டேன்.

இதில் புதுமை என்பதாய்ச் சொல்ல எதுவுமே இல்லை. ஆனால் நமக்காக என்ன நடக்கவுள்ளதோ அது நமக்காக நடக்கத்தான் செய்யும் என்றும் எதுவும் நடப்பது நமது நன்மைக்காகத்தான் என்றும் நான் நம்பிக் கொள்வேன்.

இந்த எண்ணத்தில் இனந்தெரியாதவொரு நிம்மதியை நான் உணர்ந்ததுண்டு. எனக்கு நடந்தவற்றையும் நடக்கின்றவற்றையும் நானே அவதானித்தபோதுஇ நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை என்னவெனில் நாம் நாமாக நடக்கவில்லை; நம்மையுமே அறியாத விதத்தில் ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகின்றோம் என்பதுதான்.

வெறுமனே விதண்டாவாதமாகப் பேசுவதில் பொழுது போகலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுவதில்தான் பொழுதுகள் அர்த்தம் பெறத்தக்கனவாகின்றன.

ஆழ்ந்த சிந்தனையில் எழும் நாத்திகவாதம் பொய் சொல்வதில்லை. அது சத்தியமாகத் தான் கண்டதை உரைப்பதனால்தான் அது தீமை எனத் தான் உணர்வதைச் சாடுவதற்குத் தயங்குவதில்லை. அதனால்தான் அச்சமின்மையை அது உண்மையாகவே பிரதிபலிக்கின்றது.

அதனால்தான் பொய்யான ஆத்திகவாதி இறைதர்மத்தின் இலக்கணமான அன்பைப் பொழியத் தெரியாமல் அவர்களை வெறுப்பதும் இயல்பாகவே நீதியைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற உண்மை நாத்திகவாதி அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதுமான சம்பவங்கள் நடக்கின்றன.
நாத்திகவாதம் சுட்டிக் காட்டும் மூட சிந்தனைகளுக்கெதிரான கருத்துக்கள் சிந்தனைக்குரியன.

ஆனால் அது உண்மையை அனுபவித்து கண்ட உண்மையாக இல்லாதிருப்பதே அது இறைவனைக் காண முடியாமையின் உண்மை என்று நான் நினைக்கிறேன்.

காரணம், இறைவனை உணரும் அனுபவம் என்பது நாமாக விழையாமல் நமக்குக் கிடைக்க முடியாதது என்பதுதான் என் அனுபவம் சொல்லும் உண்மையாக இருக்கின்றது.

இறைவனை உணர்வாகவே நாம் காண முடியும். அந்த உணர்வானது மனப்பூர்வமாக இருந்தாலன்றி உணர்தல் அரிது என்பதைவிட, முடியாது என்பதுதான் சரி என நான் நினைக்கின்றேன்.

கடலலை வீசுவதில்லை; அது வீசுவிக்கப்படுகின்றது. மழை தானாகக் கொட்டுவதில்லை; அது ஒரு செயற்பாடாகவே இயக்கப்படுகின்றது. காலங்களும் காலநிலைகளும் சம்பவங்களும் காரணமின்றித் தானாகவே நடப்பதில்லை; ஒன்றில் ஒன்று ஒட்டி நின்றே நடந்தேறுகின்றன.

காரியங்களனைத்துமே காரணங்களோடுதான் நடக்கின்றன. ஒரு முன்கூட்டியே அமைத்துவிடப்பட்ட மாறாத விதிமுறைப்படியேதான் இயற்கையின் எல்லா இயக்கங்களுமே இயங்குகின்றன.

அவற்றைக் கண்டுபிடித்தலே விஞ்ஞானமேயன்றி அவற்றை அமைத்து வைத்தல் அல்ல என்பதை அவதானிக்க வேண்டும். அதனால்தான் விஞ்ஞானம் தான் கண்டுபிடித்தவற்றைத் தவறான வழியில் அமுல்படுத்துவது பின்பு எதிர் விளைவுகளாகத் தோன்றி உலகை இன்று ஆழமாக பயமூட்டிக்கொண்டு வருகின்றன.

இயற்கை விதியை மீறத் துவங்குமுன் உலகம் அனுபவித்த அமைதியை இன்று எந்தப் பொந்துக்குள் தேடியும் அகப்படாத அபூர்வப் பொருளாக உலகம் தேடி அலைவது எதனாலே? அறிவியலின் தேடுதல் அணுகுமுறைகளின் அடிப்படைப் பிழைகளினால்தானே!

நோயும் சாவும்கூட சும்மா வரவில்லை; நடந்தே தீருகின்ற கட்டாயத்தாலேயே நடக்கின்றன. சும்மா நடக்குமென்றால் அதைக் கட்டுப்படுத்த முயலலாம். இயங்குவதை அப்படிச் செய்தால் அது எதிர் விளைவைத்தான் தோற்றுவிக்கும்.

இன்றைய உலக அமைதியின்மையும் காலமாற்றங்களும் தாமாக நடக்கவில்லை; நடக்க வைக்கப்படுகின்றன. அதில் மனிதனின் பிழையான பங்களிப்பின் பிரதிபலிப்புக்கள்தாம்இ தண்டனைகளாகவும் பாதகமான விளைவுகளாகவும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த எண்ணந்தான் நாம் நடக்கவில்லை நடத்துவிக்கப்படுகிறோம் என்று என்னை நம்ப வைக்கின்றது. தர்மம் தலைகாக்கும் என்பார்கள். அது என் வாழ்க்கையில் அப்படியே உடலியல் ரீதியாகவே நடந்தேறிய சம்பவம் நடந்ததுண்டு.

1983ல் இனவெறிக் கும்பலொன்றினால் படுமோசமாகத் தாக்கப்பட்ட நான் எனது இடது காதின் கேள்புலன் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உயிர் தப்பினேன். என்னோடு சிக்கிய சுமார் 20 வயது இளைஞனொருவன் இறந்தே போனான்.

என்னை அடித்து நொருக்கியவர்களில் ஒருவன் என் தலைமயிரைப் பிடித்து இழுத்துப் வைத்திருந்தான் அந்த நேரம். என் முதுகிலிருந்து முழங்கால்வரை இரத்தம் கன்றி குருதி சொட்டச் சொட்ட, என் உடம்பை அடித்துத் துவைத்தவர்கள் நான் முழுமையாக மயங்கி விழுந்தபின் என்னை இறந்துவிட்டதாக எண்ணித் தூக்கி எறிந்திருந்தார்கள். எங்கே? பிணவறைக்குள்.

ஆனால் என் தலை மட்டும் அப்படியே சில மயிர்களின் பிடுங்கலுடன் தப்பியதால்தான் என் உயிர் அன்று தப்பியது.

இன்று அதை நான் எழுதுகிறேன். தர்மம் தலை காக்கும் என்ற உண்மை என் விடயத்தில் அப்படியே அச்சொட்டாக உண்மையாகவே நடந்து விட்டிருக்கிறதே! என் தர்மம் என் தலையைக் காத்த சம்பவம் இன்று வேடிக்கைபோலத் தோன்றினாலும் உண்மை அதுதானே!

இறைவன் அன்று என்னை அப்படிக் காக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த எழுத்துக்கள் அந்த நிகழ்ச்சியை எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?

அதற்காகத்தான் அதாவது உண்மைகளை உரைப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்லுவதற்காகத்தான் நான் காக்கப்பட்டேனா?

ஆம் என்றால் ஆம்தான். இல்லையென்றால் இல்லைதான். இதில் நான் ஆமைத்தானே சார வேண்டும்? அதுதானே நியாயம்?

ஒரு நாத்திகவாதிக்கு இதில் கருத்து நிச்சயமாக வேறுவிதமாகவே இருக்கும். அது அவர் பிழையல்ல. ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு?

இயலும் நிலை இருக்கும்போது நாம் மறுக்கும் பல விடயங்கள் நமது இயலா நிலை வலுக்கும் போது நம்மால் ஏற்கப்பட வேண்டியவைகளாக ஆவதுண்டு

துன்பம் நம்மைப் புடம்போடுவது எல்லையை மீறினால்தான் நமது உள்ளமும் நம்மை மிஞ்சிய சக்தியைத் துணைக்குத் தேட விழையும்.

கால சக்கரத்தின் சுழற்சியில் சிக்கும் நமக்கு ஏற்படத்தக்க தனிப்பட்ட அனுபவங்களை மட்டும் பொறுத்தே இந்த நடத்தலும் நடத்தப்படுதலும் நம்மாலே அனுபவிக்கப்படல் சாத்தியம்.

இதை உதாரணம் காட்டி விளக்க முனைவது வானம் நீல நிறமேதான் என்று வாதாடி நிற்பது போன்றது. அது நிறமற்றது என்பதுதான் உண்மை. அல்லவா!

காட்சிகளால் நிரூபிக்க முடியாதவை எல்லாமே பொய்யென்று ஆகா.
எனவே கடவுள் உண்டா இல்லையா என்பதை விவாதிப்பதை விடஇ அதை அவரவர் சொந்த முடிவுக்கு விட்டுவிடுதலே சரியென்று நான் சொல்லுவேன். ஏனெனில் ஏற்பதிலும் ஏற்காமையிலும் இறைவனை நிறுத்திக் கணித்தல் சாத்தியமல்ல.

ஆனால்… நாம் நடத்தப்படுகின்றோம் என்ற உண்மையை மட்டும் மறுக்க என்னால் முடியவே முடியாமல் இருக்கின்றது.

என்றோ, எதற்கோ, எப்படியோ நடந்துவிடும் சம்பவங்கள் இன்று இதற்காகத்தான் இவ்வாறு நிகழ்ந்தனவோ என்று நம்மை எண்ண வைப்பதுண்டு. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த அனுபவத்தை ஏதோ ஒருவிதத்தில் நாம் உணர்ந்திருப்போம்.

இந்தச் சின்ன சம்பவத்தைக் கேளுங்கள். நான் இளைஞனாக இருந்த காலம் அது. கொழும்பு மாநகரில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஓரு நாள் ஓர் அன்பர் (ஒரு பிரபல தமிழ் ஆசிரியையின் கணவர்) வடக்கிலங்கையிலுள்ள பாலைத் தீவு என்ற குட்டித்தீவில் நடைபெறவிருக்கும் திருவிழாவுக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.

எனக்கும் ஆசை. எனவே பெயரைப் பதிந்து கொண்டேன். குறிப்பிட்ட நாளைக்கு முதல் நாள் காசெல்லாம் கட்டிவிட வேண்டும் என்றார். ஆனால் ஏதோ காரணத்தால் எனக்குக் காசு கட்ட முடியவில்லை.

அவரிடம் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டதுடன் என் இடத்துக்கு இன்னொருவரைப் பதிந்தும் விட்டார்.

இரண்டு நாட்கள் கழிந்தபின் நான் காசோடு சென்று எவ்வளவோ வாதாடியும் மனுசன் ஏற்கவே இல்லை. ஏமாற்றத்துடன் வேறு வழிபற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பெருங்கவலையுடனிருந்தேன்.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற இரண்டாவது நாள் பத்திரிகைகளில் படங்களுடன் ஒரு பயங்கர செய்தி வெளியாகியது. வானொலியும் கதறியது.

யாத்திரிகர்களுடன் சென்ற படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்து அனைவருமே மூழ்கி இறந்து போனார்களாம். அந்த வள்ளத்தில் கொழும்பிலிருந்து சென்றவர்களும் இருந்திருக்கிறார்கள். என்னை மறுத்த ஏற்பாட்டாளரும் இறந்தவர்களில் ஒருவர் என்ற செய்தி கிடைத்தது. அப்போது நானடைந்த உணர்ச்சிகள்! இன்றைக்கும் பசுமையாக இருக்கும் அதிர்ச்சிச் செய்தி அது.

அவரது சடலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது. அவரது சவ அடக்கத்தில் கலந்து கொண்ட போது, எனது நண்பர் ஒருவர் சொன்னார்.

“ நல்ல வேளை கடவுள் உன்னை அன்றைக்குக் காப்பாற்றிவிட்டார். உன்னை மட்டும் அன்றைக்குத் தடுத்திருக்காவிட்டால் நீயும் இப்படித்தான் வந்திருப்பாய்! அல்லவா?”

இதற்குள் கடவுளை என் நண்பர் மட்டுமா? நானும்தான் உணர்ந்தேன். இதைக் காண முடியாது. அனுபவப்பட வேண்டும். அந்த மனநிலை வந்தால் மட்டுமேதான் அது சாத்தியம். இல்லையேல் அது பொய்யாக மட்டுமேதான் இருக்கும். உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை. அவ்வளவுதான்

சுயமாகப் பறக்கும் பறவைகூட தன் இறக்கைகளை அசைத்தால் மட்டுமே அது நடக்கிறது. அதுவும் அதற்குரிய உடலமைப்பு அமைந்திருந்தால் மட்டுமே அது சாத்தியப் படுகின்றது.

உயரப் பறக்கும் குருவி போல ஒரு கோழிக்கு முடியாது. இரண்டும் பறவைகளே என்றாலும் நிலைமை அப்படி இருக்கிறது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நடத்தப்பட்டுஇ எல்லாமே சேர்ந்து ஒரு பொதுவான இயக்கத்தைத் தொடரவும் நடத்தவும் நியதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் வாதாட்டங்களுக்கப்பால் இருக்கும் உண்மையைத்தான் உள்ளம் உரைப்பதற்கேற்ப உருக் கொடுத்து மதிப்பளிக்க முனைகின்றது மனித மனம். அதையே தொழில் வழியில் கருதி நடத்த முயலும் போதுதான் வில்லங்கங்கள் முளைக்கின்றன.

அதற்குரிய சரியான அல்லது பிழையான பங்காளி மனிதனே அன்றி அந்த சக்தியல்ல. எனவே புத்தி பெற வேண்டியவனை விட்டுவிட்டுஇ புத்தியைச் சாடுவதில் நியாயம் இருக்கிறதாக நினைக்க முடியாமலிருக்கின்றது.

நல்ல எண்ணங்களும் நல்ல திட்டங்களும் நல்ல நோக்கங்களுக்காக நமது மனங்களுள் துளிர்விட்டுக் கொண்டே இருக்கட்டும்.

அந்த எண்ணங்களின் வழிகாட்டலில் உலகம் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.

விரலனைத்தும் சமத்துவம் விழைந்து நின்று
விதியாகச் சமமாக நீட்டி நின்றால்
எழுதலும் உண்ணலும் வேண்டும் போது
என்னாகும் விரல்நிலை என்பதைத்தான்
விதிசெய்யும் மேலவன் நமது பாதை
பிழையாயின் உணர்த்தியும் காட்டுகின்றான்
அவன் என்று சொல்வதோ அஃது என்றோ
அவரவர் சிந்தனை கொண்டபோதும்
அமைப்பொன்றின் அடிப்படை மட்டுமுண்டு
ஆண்டவன் என்பதும் அதையே இன்று.


தமிழமுதம்
Tuesday, 21 December 2004
posted by Unknown @ 12:46 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்