எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
இயற்கையை மீறி நாம் நடந்திடுங்கால் இயற்கையின் சீறலே நடந்திடும்; பார்!
Freitag, Juli 18, 2008
(இக்கட்டுரை சுனாமி ஆசியாவை, குறிப்பாக இலங்கையைத் தாக்கிய நேரததில் எழுதப்பட்டது)


மனம் நிறைய நத்தார் திருநாள் மகிழ்ச்சியுடன் இருந்தவாறே வரவிருக்கும் புதுவருடத்திற்காக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து எழுதிக் கொண்டிருந்த என்னை ஒரே கணத்தில் அப்படியே நிலைகுலைத்துவிட்ட அந்த அனர்த்தத்தை நினைத்துப் பார்க்கின்றேன்.

உயிர் தப்பி இங்கே ஜெர்மனியில் நான் அமைதியாக வாழ்வதற்கு அத்திவாரமாக அங்கே இருந்து வந்த துயரம் சுமக்கும் சுமை தாங்கிகளான நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற எனது மக்களின் மேல் இயற்கை கட்டவிழ்த்துவிட்ட கட்டுமீறிய அட்டகாசம் என்னை அணுவணுவாகக் கொல்வதைப்போலப் பெருஞ்சித்திரவதை செய்வதைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் வீட்டுக்குள்ளே தனித்திருக்க முடியாமல் தவித்தழுதேன்.

அடிக்கடி நகர்ப் பக்கம் நடந்து நடந்து என்னை ஆறுதல்படுத்திக் கொள்வதற்காக நான் படாத பாடு படுகின்றேன். என்னையே நான் ஏமாற்றிக் கொண்டு எனக்கு ஆறுதல் தேடிக் கொண்ருக்கின்றேன்.

பாவத்திற்குத் தண்டனை மரணம் என நான் ஏற்றிருக்கும் எனது மதம் சொல்கின்றது. ஆனால் அப்பாவிகளுக்கு ஏன் மரணம்? அதுவும் இப்படி அங்கீகரிக்கவே முடியாத கொடுமையான முறையில் ஏன் மரணம்? மாசற்ற குழந்தைகளைக்கூடத் தண்டிப்பதில் என்ன தெய்வ நீதி இருக்க முடியும்?

நான் நம்பிக் கைகூப்பி வணங்கும் தெய்வமே எனக்கு எதிரியாகி விட்டதைப் போலவும் என்னை ஏமாற்றி விட்டதைப் போலவும் ஒரே கோபமும் ஆத்திரமுமாக எனது கண்களில் எரிச்சலும் உடலில் நடுக்கமும் ஏற்படுவதை உணர்கின்றேன்.

படுக்கையில் சாய்ந்தாலும் உறக்கம் வர மறுக்கின்றது. எப்படியோ ஆழ்ந்து உறங்கிவிடும் என்னைத் திடீரென்று பெருங் கடலலையொன்று சுழற்றியடித்துச் சுற்றியிழுத்துத் தனது ஆழமான இருட்டறைக்குள் இழுத்துச் செல்வதைப் போலவும் நான் மரண பயத்தினால் துடிதுடித்து அலறுவதைப் போலவும் நனவுபோல ஒரு கனவு வந்து என்னைத் துள்ளியெழ வைக்கின்றது.

என்னை மீறிய பயமும் துயரமும் என்னை இறைவனை நினைக்கத் தூண்டுகின்றன. அடுத்த கணமே “அவன்தானே இதைச் செய்கின்றான். அவனிடமே உதவிக்குப் போனால் காக்கவா செய்வான்?” என்று ஓர் அசரீரிக் குரல் கேட்பதுபோல உணர்வில் தெரிகின்றது. திகைப்பும் பதைபதைப்பும் மருட்சியுமாக எனது தூக்கமே கலைந்துவிட எழுந்துவிடுகின்றேன்.

கடிகாரத்தைப் பார்க்கின்றேன். நள்ளிரவைத் தாண்டி அதிகாலை இரண்டு மணி. ஐந்து மணிக்குள் எழுந்து வேலைக்குப் போக வேண்டுமே! இனித் துயின்று எழுவது நடக்குமா? இல்லவே இல்லை. நேராக எழுந்து தொலைக் காட்சிப் பெட்டி இருக்கின்ற அறைக்குள் சென்று அமர்கின்றேன்.

நேரத்தை ஓட்டிக் கொள்வதற்காக என்னென்ன நிகழ்சிகளையெல்லாமோ தேடித் தேடி விசையை அழுத்தும் நான் செய்தி அலைவரிசைகளை மட்டும் முற்றாகவே தவிர்க்கின்றேன்.

ஏன் தெரியுமா?

அதைப் பார்த்தால் அதில் மிதக்கும் மனித சடலங்கள் எனது சுய நிலையையே தடம் புரட்டி விடுமோ என்று ஒரே அச்சமாக இருக்கின்றது எனக்கு.

எனது பயமும் ஆத்திரமும் ஆண்டவனையே தண்டித்து விட வேண்டும் என்று என்னை அழுத்துவதுபோன்ற ஒரு அனுபவம் எனக்குள் அலைக்கழிகின்றது.

கடலில் மரணித்தவர்களுக்காக மலர்களைக் கடலில் எறிந்து அஞ்சலி செய்வதைப் பார்த்திருக்கின்றேன். இன்று எத்தனையோ மலர்களையொப்ப பிஞ்சுப் பாலகர்களே செத்த மலர்களாக அதே கடலில் மிதக்கக் கண்டபோது “கடலே உன்னை அழிக்க ஒரு காலதேவன் என்றைக்கு வருவான்?” என்று என்னையும் அறியாமலே எனது உதடுகள் திட்டுவதை உணருகின்றேன்.

மனித சட்டம் சொல்கின்றது: “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிட்டாலும் ஒரு அப்பாவி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது” என்று.

குற்றத்துக்காகத் தண்டிப்பது நியாயம்தான். ஆனால் யாரை? குற்றம் செய்தவனை. அப்படியல்லாமல் அவனுக்காக வெறும் அப்பாவிகளை யாராவது தண்டிப்பார்களா? அது நியாயமா?

ஆனால் அப்படித்தானே இந்த இறைவன் செய்திருக்கின்றான் இங்கே! அப்படியானால் இனி வேலிகளே பயிரை மேய்வதுதான் நியாயம் என்று அவன் கற்பிக்க வருகின்றானா? எனக்கென்றால் புரியவே இல்லை இந்த நியாயம்.

இயற்கையின் வளங்களை வரையறையில்லாமல் அள்ளியள்ளிப் பணம் பெருக்கும் முதலாளித்துவ மாபாவிகளின் தலைகளில் இதே இறைவன் இடியைப் போடட்டும். அவர்களது மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கடலினாலும் காற்றினாலும் நெருப்பினாலும் நொருக்கித் தகர்த்து எரித்து நிர்மூலம் ஆக்கட்டும். அப்போது எவருமே கவலைப் பட மாட்டார்களே! அதற்கு மாறாக கடவுளின் நீதியின் ஆட்சியின் உறுதியில் தங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்வார்களே!

அப்படியில்லாமல் அப்பாவிகளை இப்படி அநியாயமாக அழித்தொழிக்க அவனுக்கு மனம் வந்ததெப்படி?

ஏதோ பயங்கரவாதிகளை ஒழிக்கின்றோம் என்று பொய்யாக ஒப்பாரி வைத்துக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களைப் பல்லாயிரக்கணக்காகக் கொன்று ஒழித்துவிட்டு அவர்களுக்கிடையிலே தற்செயலாகச் சிக்கியாவது ஓரிரு பயங்கரவாதிகளாகிய தங்களின் எதிரிகள் அழிந்தாலே போதும் என்று மனிதத்தையே குழி தோண்டிப் புதைத்துவரும் இந்த ஆதிக்க ஜனநாயக வெறியர்களின் முகமூடியாகக் கூட இந்த இறைவன்தானே இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றான்?

இந்த அனர்த்தம் நியாயமென்றால் இவர்களின் பண்பு கெட்ட செயல்களும் நியாயங்களாகி விடுமே! இது நியாயந்தானா? இப்படியொரு அநீதிக்குத் துணையானவனாக இறைவனை எப்படி எவரால் எங்கே ஏற்பதற்கு இயலும்?

இப்படியெல்லாம் துடியாய்த் துடித்த பின்புதான் ஒரு பெரிய அடிப்படை உண்மை எனக்குப் புரிந்தது.

இது இயற்கையை மதிக்காமல் அதனுடன் அறிவியல் மேன்மையை மோதவிட்டு இன்றைய உலகம் அந்த இயற்கையின் இயல்பான நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தி வரும் இடைஞ்சல்களின் காரணமாக ஏற்படும் பாரிய பாதிப்புக்களின் எதிர்விளைவுகளேயன்றி வேறொன்றுமில்லை என்ற உண்மையே அது.

எண்ணெய் உறிஞ்சப்படுவதால் ஏற்படக்கூடிய இயற்கை இடைவெளிக்கு ஈடாக எதுவுமே செய்யப்படுவதில்லை. மரங்களை அழிப்பதனாலே ஏற்படுகின்ற பாரிய இயற்கைவழி மாற்றங்களுக்கு ஏற்ற மாற்று வழி செய்யப்பட வில்லை. வடதுருவம் வரவர உருகிக் கொண்டே வருகின்றது. அதுவும் மனித தவறுகளினால்.

அதனால் கால நிலையில் தாக்கம் ஏற்படுகின்றது. ஆனால் அறிவாளி அரசியல்வாதிகள் நோயைத் தீர்க்காமல் அதை வளர்த்து விட்டுப் பணம் பண்ண முற்படும் குள்ளமனம் கொண்ட கள்ள கெட்ட குணமுடைய வைத்தியர்களைப்போல பேச்சுவார்த்தை நாடகங்களை மேடையேற்றி உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த கொடிய பூகம்பமும் கடற் கொந்தளிப்பும் நடந்தபோது முழு பூமியுமே தனது வழியிலிருந்து சற்று நகர்ந்து விட்டதாகவும் பல நாடுகள் விலகிவிலகி நகர்ந்து நிற்பதாகவும் உலக உருண்டையின் சுழற்றியில் தாக்கமேற்பட்டு 365 நாட்கள் ஒரு வருடம் என்ற நிலை மாறி 364 நாட்கள் என மாறுபடும் ஆபத்து எழுந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றார்களாம்.

இனி இயற்கையாக இயங்கி வரும் கால நிலையும் அதை அச்சொட்டாக அனுசரித்து வாழ்ந்துவரும் மரங்களும் பறவைகளும் விலங்குகளும் ஏதோ ஒரு விதத்தில் வழி பிறழ்ந்து வாழ்விழந்து அழியக் கூடத் தொடங்கி விடலாம்.

இது நகைக்கவோ சிரிக்கவோ இரசிக்கவோ அலட்சியப்படுத்தவோ கூடிய செய்தியல்ல. உலக வீட்டின் கதவுக்கருகில் அழிவுக்குரிய பேராபத்து என்ற வெடிகுண்டொன்று வைக்கப்படப் போவதாக இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு உதவி செய்வதோடு நின்று விடாமல் இனிமேலும் இப்படியொரு பேரழிவு நடந்து விடாதபடிக்கு என்னென்ன வழிகளைக் கண்டறிய முடியுமோ அத்தனையையும் அலசி ஆராய்ந்து விஞ்ஞானிகள் வழியமைத்து அதனை இந்த அராஜக நாசகார சுயநல அரசியல்வாதிகளின் அடக்குமுறைகளை மீறியாவது அமுல்படுத்தியே ஆகவேண்டும்.

காரணம், இந்த மாபாவிகள்தான் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் இடைஞ்சல் செய்து வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் அதிபயங்கர பயங்கரவாதிகள்.

உலகம் இயற்கையை வெல்ல முயலலை விட்டு விட்டு இந்தச் சனியன்களை முதலில் வெல்ல வேண்டும். அப்போதுதான் நமது அன்னையும் இறைவனுமாகிய இயற்கையை நாம் சமாதானப்படுத்திட முடியும்.

அப்போதுதான் நமது கண் முன்பாகவே நமது உடன் பிறப்புக்களாகிய சக மனிதர்கள் அநியாயமாக அழிந்து ஒழிவதைக் கண்டு பதைபதைக்கும் பரிதாப நிலைமைக்கு ஒரு சரியான முடிவு வரும்.

தர்மம் இல்லங்களில்தான் துவங்கவேண்டும் என்பார்கள். இன்று முதல் நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற எல்லா விதங்களிலும் இயற்கையன்னைக்கு ஏற்ற விதமாக இயற்கையை மதித்து நடக்க முடிவெடுப்போம்.

அப்படி நடந்தால்தான் இப்படி இரக்கமிலலாமல் நம்மை அழிக்க வரும் இறைவனும் அடங்கி அமைதியாகத் திரும்பிப் போவான்.

இத்தனை ஆயிரம் இதயங்களின் இரத்தக் கண்ணீரும் இனியாவது நமது கண்களைத் திறந்தாகட்டும்.

இறைவா! எங்களின் தலைவர்களின் தவறுகளுக்காக எங்கள் அப்பாவிச் சகோதரங்களைக் கொலை செய்வதை விட்டு விட்டு நாடு தேடி, ஊர் தேடி, வீடு தேடி இந்த அனர்த்தங்களின் அடிப்படைகளாக விளங்கும் அந்தப் படுபாவிகளை அழித்து, ஒழித்து எங்களையும் உலகத்தையும் காப்பாற்று. இந்த இயற்கைக் கொலைகாரர்களை விட்டே வைக்காதே!

கொன்று குவித்துக் குதூகலி.

ஆனால் மறந்தும் இந்தப் பிழையை மட்டும் இனியெப்போதுமே செய்துவிடாதே! செய்தாயோ...

உன்னையே நாங்கள் கைகழுவிவிடுவோம்.

ஜாக்கிரதை!


தமிழமுதம்
Thursday, 30 December 2004
posted by Unknown @ 10:09 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்