எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
பாவகரமான புண்ணியங்கள்
Sonntag, Juli 20, 2008
பாவகரமான புண்ணியங்கள்


மிக மிக அவசரமாக ஒருவர் தனது பயணத்தைத் துவங்குகிறார். அதை அவர் உடனடியாகச் செய்யாது விடின் அவரது எதிர்காலமே அதாவது அவரது குடும்பத்தின் சுபீட்சமே முற்று முழுதாக அருகிவிடும் என்பதால் பல நாட்கள் தாம் ஆயத்தப்படுத்தித் திட்டமிட்டுவிட்டு, இன்றுதான் அது நடைமுறைச் சாத்தியமாகும் என்று தெரிவதனால் தனது எல்லா இதர வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, இதற்காகவென்றே அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

தனது இருக்கையில் அமர்ந்ததும் “அப்பாடா!” என்றவோர் ஆழ்ந்த பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்படுகின்றது.

ஒரு சிறிய குடும்பம். இரண்டாண்டுக் காலமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துச் சேர்த்து இரண்டு வார உல்லாசப் பயணத்துக்காகப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தாயின் மடியில் தவழும் அந்த மழலைக்குக் கூட தான் ஏதோ ஒரு புது அனுபவத்தைப் பெற இருப்பதுபோன்ற திருப்தி முகத்தில் திகழ, “கியா மியா” எனத் தனக்கேயுரித்தான மழலையில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. சற்று வளர்ந்தவர்களான இதர பிள்ளைகளைத் தந்தையார் ஆத்திரமே இல்லாமல் சிரித்தவாறே அதட்டி, அதட்டி அவர்களின் வாண்டுத் தனங்களை அடக்கி கொண்டு இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் சில மாதங்களாகத் தன் குடும்பத்தையே காணாமல் தொழில் ரீதியாக உலகைச் சுற்றிக் கொண்டிருந்தவர் ஒருவர் தமது குடும்பத்தை மனக்கண்ணால் எதிர்பர்த்து இரசித்தபடி புன்முறுவலோடு இலேசாகக் கண்ணயர்ந்து கொண்டிருக்கிறார்.

தனது காதலிக்கு சற்று முன்தான் தான் வரப் போவதைத் தெரிவித்துவிட்டு, அவள் அந்த மகிழ்ச்சியில் சலங்கையாகக் கலகலத்ததைத் தனது தொலைபேசியில் கேட்டுவிட்டு, கற்பனையில் அவள் முகத்தை இரசித்து இனித்த இளைஞனொருவன் அந்த இனிமை தந்த சுகத்தை இன்னும் அனுபவித்தவாறே சன்னலினூடாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஆங்காங்கே இளஞ் சோடிகளும் கிழச் சோடிகளும் இணைந்திணைந்து அமர்ந்திருந்து கலகலவென தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

திடீரென ஒரு விதமான அமைதி அவ்விடத்தில் நிலவத் தொடங்குகின்றது. ஓர் இளம் பெண் வந்து நிற்கின்றாள். தடாகத்தின் நடுவிலே பூத்து நிற்கின்ற தாமரைபோன்ற பேரழகுடன் அவள் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டுப் பயணம் பற்றிய சில முக்கியமான விளக்கங்களை அளிக்கின்றாள்; செய்தும் காட்டுகின்றாள்.

சிறிது நேரத்தில் அந்த இடம் சற்று அதிர்கின்றது. பிறகு நகர்கின்றது. பிறகு எழுந்து பறக்கின்றது.

ஆம்! அருமையான திட்டங்களும் கனவுகளும் மகிழ்ச்சிகளும் பாசங்களும் கற்பனைகளும் வானத்தில் எழும்பிப் பறக்கின்றன. பச்சைக் குழந்தைகளின் உள்ளங்கள் அவற்றிற்கும் மேலாகப் பறக்கத் துவங்குகின்றன.

ஒரு விமானம் புறப்பட்டுப் பறந்து போய்க் கொண்டிருக்கின்றது.

பானங்களும் பகலுணவும் பரிமாறப்பட்ட பின்னர், பலரும் சற்று அசதியுடன் கண்ணயர்கின்றார்கள். ஒருவிதமான அமைதியான அந்த நேரத்தில் திடீரென அந்த விமானம் அதிர்ந்து குலுங்குகின்றது. எத்தனையோ விதவிதமான உணர்வலைகளுக்குள் திளைத்துக் கொண்டிருந்த அத்தனை உயிர்களின் முகங்களிலும் அதிர்ச்சி என்ற ஒரே உணர்வு மட்டுமேதான் இப்போது பிரதி பலித்துக் கொண்டிருக்கின்றது.

அதுவே அடுத்த கணத்தில் பீதியாக மறுவுருவெடுக்கின்றது. தொடர்ந்து பெரும் அலறலும் பதட்டமும் தடுமாற்றமும் துடிதுடிப்புமாக அந்த விமானம் அல்லோல கல்லோலப்படுகின்றது.

சிற்சில வினாடிகளே கணங்களாகி, அந்தப் பென்னம் பெரிய விமானம், பாரிய தீப்பிழம்பாக பூமியை நோக்கி விரைந்தோடி, விழுந்து நொறுங்குகின்றது. எத்தனையோ உயிர்கள், எத்தனையோ வாழ்க்கைகள் எத்தனையோ ஆர்வங்கள், எத்தனையோ எதிர்பார்ப்புக்கள், எத்தனையோ மகிழ்ச்சிகள், எத்தனையோ குடும்பத் தொடர்புகள். அத்தனையும் சில நொடிகளுக்குள் கருகிச் சாம்பலாகி, இருந்த இடம் தெரியாமல் அழிந்து, ஒரு குப்பைக் குவியல்போலக் குவிந்து விடுகின்றன. ஒரு கணப் பொழுதில் பல சந்ததிகளே சிதைந்தழிந்து ஒழிந்துபோய் விடுகின்றன.

பத்திரிகைச் செய்திகள் அந்த பயங்கர அழிவைப்பற்றித் தரும் செய்தியின் அதிர்ச்சியையும் மிஞ்சிடும் விதத்தில் அந்த அழிவுக்குத் தாங்களே காரணகர்த்தாக்கள் என்று யாரோ பெருமையுடன் அறிவித்து மகிழும் ஓர் அறிக்கையும் வெளிவருகின்றது.

ஆம்இ அழிவையும் அழுகையையும் ஆர்வத்தோடு இரசித்து மகிழும் ஒரு மனிதப் புழுக்கூட்டமே அவ்வாறு குதித்துக் கும்மாளமிடுகின்றது.

நாங்கள் வணங்கும் கடவுளை ஏற்காத இவர்களை அந்த தெய்வத்தின் சார்பாக நாங்கள் கொன்று, அழித்து நிற்பதே எமது கடமை என்று அவர்கள் சொல்வதைக் கேட்டு, ஆத்திரத்துக்கும் அப்பாலே ஆழமான ஏதாவது ஓர் உணர்வு உண்டா என்று சாதாரண மனித குலம் மனக்கண்ணால் தேட முனைந்து, கிடைக்காமல் கொதித்துக் கதறுகின்றது.

குற்றமே செய்யாமல் தண்டிக்கப்படும் கொடுவிதியை விதிக்கவரும் கொடும் புத்திக்காரர்களிடமிருந்து தப்பவே முடியாதா என்று அப்பாவிப் பொதுமக்கள் அலறி அங்கலாய்க்கின்றார்கள்.

மறுவுலகுக்குப் போக அவர்கள் செய்யும் புண்ணியமாக இந்த மாபாவத்தை அவர்கள் அங்கீகரித்து நிற்பது புண்ணியமா அல்லது பாவகரமான புண்ணியமா? என்று தடுமாறுகின்றது உலகம்.

இன்னோர் இடத்தில் அமைதியாகப் புகைவண்டியில் யாத்திரை செய்து கொண்டிருக்கும் மக்கள் அப்படியே வண்டியோடு தீவைத்து எரிக்கப்படுகின்றார்கள்.

தம் மத ஆலயத்தைத் தகர்த்ததற்குத் தண்டனையாக அதற்குச் சற்றேனும் சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை எரித்து மகிழ்ந்து விட்டு மறைகின்றது ஆண்டவனின் பெயராலே ஒரு குழு.

அதற்காக?

அதைச் செய்தவர்களைத் தேடித் தண்டிக்க நினைக்காமல் அவர்களின் சார்பாக அவர்கள் சார்ந்த மதத்தவர்களையே மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டிலிட நினைத்த பக்தர்களாலும் பக்த வேடர்களாலும் இன்னொரு அப்பாவி மத மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள்.

இரத்த ஆறு ஓடவிடப்படுவதைத் தூண்டிவிடவென்றே பல புண்ணியவான்கள் முளைத்து நிற்கின்றார்கள்; முனைந்து நிற்கின்றார்கள். தேசம் என்ற பற்று மறைந்து துவேஷம் என்ற வெறியுணர்வு எழும்பி நிற்கஇ மனிதம் மரணத்தை நோக்கி நடக்க வைக்கப்படுகின்றது. இரு பக்க கொலைகளுக்கும் அடிப்படையில் ஆண்டவனின் பெயரே இருப்பதால் இருவரின் செய்கைகளுமே புண்ணியங்களாகவே அவரவர்களுக்குத் தெரிகின்றன. பாவகரமான புண்ணியங்கள்.

இறைவன் ஒன்றே என்பானே இகத்தை இரண்டாக்கிப் பிளக்க அவன் பெயரால் மதத்தைப் பயன்படுத்துகின்றான்.

மதக் கதைகளை நம்புமளவுக்கு அவற்றினுள் பொதிந்திருக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு மதங்கள் வியாபாரச் சந்தைகளுக்குள் தள்ளப்பட்டு, புண்ணியமென்ற பெயரால் பண்டமாற்றுக்களும் பணமாற்றங்களுமே படமாகக் காட்டப்பட்டு வருகின்றன. பாவகரமான புண்ணியங்கள்.

ஒழுக்கம் என்பதை உதாசீனம் செய்துவிட்டு, அது தனிநபர் சுதந்திரமென்றும் அக்குற்றத்தின் பக்க விளைவுக்கு எதிரான பாதுகாப்புக்கு மருத்துவம் என்றும் அறிவியல் என்றும் பெயர் சூட்டி விட்டு “சுதந்திரத் தவறாடல்” சரியான வழியாகப் படிப்பிக்கப்படுகின்றது. பாவகரமான புண்ணியங்கள்.

விபச்சாரம் என்பதைத் தொழிலாக நடக்கவும் நடத்தவும் சட்ட பூர்வமாக அனுமதித்து விட்டால் “எய்ட்ஸ்” உட்பட எல்லா அதைத் தொடர்ந்து பரவிவிடக்கூடிய ஆபத்துக்களையும் சட்ட பூர்வமாக வைத்தியர்களைக் கொண்டே தடுத்துவிடலாம்.

ஆகவே விபச்சாரம் ஒழுக்கத்துக்கு விடப்படும் சவாலல்ல. அது சமுதாயத்திலிருந்து தவிர்க்க முடியாத ஒரு நியதி என்பதாக ஆக்கிவிட வேண்டும். அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களுக்கும் வழி பிறக்கும். பல பெண்களுக்கும் பிழைப்புக்கு வழி கிடைக்கும். அதனால் அரசுக்கும் வரி கிடைக்கும்.

இப்படி மாறி வருகிறது நவீன சிந்தனை. அதாவது “செருப்பின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப உனது காலை அறுத்துக் கொள்” என்று ஒழுக்கத்துக்கு உபதேசம் செய்கின்றது நவீன நாகரீகம். சமுதாயத்தை நோயினின்று காக்கத்தானே! ஆதலால் இதுவும் புண்ணியம்தான். ஆனால்..பாவகரமான புண்ணியம். இல்லையா?

ஆலயங்களுக்குள் நடக்கும் பூசைகளும்கூட அவனவன் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப கடவுளுக்கு அனுப்பப்படும் “பெட்டிஷன்” ரக விண்ணப்பங்களாகவே இருக்கின்றன. ஆலய நிர்வாகங்களும் ஆண்டவனுக்கு அஞ்சிய காலம் மலையேறி விட்டது.

ஆலயத்துள் மாமூல் கொடுத்துப் புண்ணியம் தேடும் பழக்கம் “பகலொளி இரவாக” வே எங்கணும் பரவி நிற்கின்றது. ஆண்டவன் பெயரால் எங்கெங்கே திரும்பினாலும் அங்கெல்லாம் பணம் வீசிப் பரலோகம் போக வழி தேடும் புண்ணியமே நடைமுறையில் தெரிகின்றது.. பாவகரமான புண்ணியம்.

பொது மக்களுக்குள் நுழைந்து பார்த்தால்....

உதவுவதுபோலக் காட்டி உழைத்துக் கொண்டோடும் போலித் தொண்டர்கள் அவனவன் வளர்ந்து கொள்ளப் பிறனின் அறிவைப் பயன்படுத்தும் அரசியல் தந்திரங்கள்.

எதைச் செய்தும் பணம் மட்டும் சேர்த்துவிட்டால் போதும். அதனை மலைப்பூட்ட வைக்கும் சாதனையாகக் கருதும் பரிதாபம்.

பாவம் செய்பவனைப் புகழ்ந்து போற்றித் தன் நிலையை உயர்த்திக் கொள்ள விழையும் பொய்மையின் பிம்பங்களின் ஏகபோக நடமாட்டங்கள்.

இவற்றுக்குப் பெயர் பொது சேவை. பொது சேவை என்பது புண்ணியம் என்றால்...இது என்ன? பாவகரமான புண்ணியம். அல்லவா?

ஏணியிலே நிற்பவனைக் கீழிருப்பவன்
“ஏறியது எப்படிநீ?” என்று கேட்கிறான்.
“காட்டிக் கொடு.புண்ணியமது” என்று சொன்னதால்
ஏணிமேலே நின்றவனும் இறங்கி வருகிறான்.

“ஏறும் விதம் இவ்விதமே!” என்று சொன்னதும்
கீழிருந்த கீழ்மகனோ ஏறிக் கொள்கிறான்.
ஏறிவிட்ட தோடு அவன் நின்றுவிடுவனோ?
காலுதைத்து ஏணிதன்னை வீழ்த்தி உடைக்கிறான்.

ஆக.....

ஏணி தன்னில் ஏறி நிற்க வழியைச் சொன்னவன்
என்னசெய்வ தென்றறியா தழுது நிற்கிறான்.

பாவகரமான புண்ணியம்.

உலகம் சுழல்கிறது. ஆனால் நாம் சுழல்வதில்லை. ஆனால் பாவம் சூழும்போது நாமும் வீழ்ந்து விடுகிறோம்.

யாரும் அல்ல நாமே தான் நம்மைக் காக்க வேண்டும். புண்ணியமா? அதைச் செய்யுமுன் சிந்தியுங்கள். சுயபலன் கருதா நற்செயலொன்றே புண்ணியமென்றும் மற்றெவ்வழியும் பாவமே என்றும் உணர்ந்தே இருங்கள். இல்லையேல் தீயை அள்ளி அள்ளி மரம் வளர்க்க உரமாய் போடும் தவறுக்கே உரித்தாவீர்கள்.

தெரியாமல் செய்வதும் பாவமும் பாவம். தெரியவே செய்யும் பாவமும் பாவம்.

வெள்ளையில் கறுப்பைக் கலந்தால் அது வெள்ளையாகாது. களங்கமாகும். புண்ணியத்துள் பாவத்தைக் கலந்தால் அது புண்ணியமாகாது. வெறும் பாவகரமான புண்ணியமாகவே அது ஆகும்.

செய்யும் பணியதிலே புண்ணியம் சேர்வதற்கு
பொய்யும் தந்திரமும் இல்லா திருப்பதுவும்
கையில் விளக்காக சத்தியம் முன் நிற்க
கைசெய்யும் சாதனையும் அவசியம் என உணர்வோம்

வெள்ளை நிறமென்றால் களங்கம் அதிலின்றி
வெள்ளை முழுவெள்ளை என்றாலே அதுவாகும்
கொள்ளை அடிப்பவனின் தர்மம் சரியென்றே
கொள்ளை துணை செல்வான் சொல்வான் நம்பாதீர்!

புண்ணியம் போல்பாவம் செய்வரே கூடியதால்
புண்ணியம் என்னதெனத் தெரிவதும் அரிதாகி
கண்ணியம் கெட்டவரும் கள்மனம் கொணடவரும்
புண்ணியம் எனப்பாவம் தனைக் காட்டி வைத்தனரே!

எள்ளிலும் சிறிதாயும் கபடங்கள் சேர்ந்திருந்தால்
எத்துணைப் பெரிதாயின் புண்ணியம் சேராது
கண்ணுக்குத் தெரியாமல் உள்ளம் செய் நல்வினையே
விண்ணுக்கும் மேலாய்நின் புண்ணியம் உயர்த்திவிடும்.


தமிழமுதம்
Sunday, 26 December 2004
posted by Unknown @ 10:59 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்